“பிரதமர் மோடியைப் போன்று வேறொரு சாமானியன் பேசியிருந்தால் அவரை மனநல மருத்துவரிடம்தான் அழைத்துச் சென்றிருப்பீர்கள்” – ராகுல் காந்தி விமர்சனம்!

“பிரதமர் மோடியைப் போன்று வேறொரு சாமானியன் பேசியிருந்தால் அவரை மனநல மருத்துவரிடம்தான் அழைத்துச் சென்றிருப்பீர்கள்” என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல்…

“பிரதமர் மோடியைப் போன்று வேறொரு சாமானியன் பேசியிருந்தால் அவரை மனநல மருத்துவரிடம்தான் அழைத்துச் சென்றிருப்பீர்கள்” என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.  இதுவரை நாடு முழுவதும் 5 கட்ட தேர்தல் நடைபெற்றுள்ள நிலையில்,  6ம் கட்ட தேர்தல் 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் வரும் 25ம் தேதி நடைபெற உள்ளது.

பீகாரில் 8 தொகுதிகள்,  ஹரியானாவில் 10 தொகுதிகள்,  ஜம்மு – காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்க்கண்டில் 4 தொகுதிகள்,  டெல்லியில் 7 தொகுதிகள்,  ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தரபிரதேசத்தில் 14 தொகுதிகள்,  மேற்குவங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  அரசியல் தலைவர்கள் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில்,  ஒடிசாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டபோது,  பிரதமர் நரேந்திர மோடி தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அளித்த பேட்டியில், “சாதாரண மனிதர்களைப் போல பயலாஜிகலாக நான் பிறந்திருக்க வாய்ப்பில்லை” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமர் மோடி “நான் பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை என நம்புகிறேன்.  மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை.  என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான்.  ஏதோவொரு விஷயத்தை நடத்தியே ஆக வேண்டும் என்பதற்காகக் கடவுள் என்னை பூமிக்கு அனுப்பியுள்ளார்.  நான் பெற்றிருக்கும் ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருப்பது கிடையாது.  கடவுளால் மட்டுமே இதை கொடுக்க முடியும்” இவ்வாறு மோடி தெரிவித்தார்.

https://x.com/RahulGandhi/status/1793557222494224767

இந்த நிலையில் இதுகுறித்து விமர்சித்துள்ள ராகுல் காந்தி தெரிவித்ததாவது..

“பிரதமர் மோடி பயலாஜிகலாக பிறந்திருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும் மனிதப் பிறவியாக இருக்க வாய்ப்பில்லை.  என்னை பூமிக்கு அனுப்பியது பரமாத்மாதான் என தெரிவித்துள்ளார்.  தற்போதைய நாட்களில் பிரதமர் மோடியைப் போன்று  வேறு யாரேனும் ஒரு சாமானியர் இதனைக் கூறினால், அவரை நேராக மனநல மருத்துவரிடம்தான் அழைத்துச் செல்வீர்கள்” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.