“ஆன்லைன் ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்” – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

Swiggy, Zomato ஊழியர்களுக்கு அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2025 -2026ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 8வது முறையாக நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பதாவது,

“அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவக் கல்லூரிகளில் மேலும் 75,000 இடங்கள் சேர்க்கப்படும். அடுத்த ஆண்டில் மட்டும் சுமார் 10,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும். அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்.

நடப்பாண்டில் அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும் சுமார் 2000 டே கேர் (Day Care) புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும். ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டுத் திட்டம் கொண்டு வரப்படும். முதன் முறையாக இத்தகைய திட்டம் அறிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்து ஊழியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். Swiggy, Zomato, zepto ஊழியர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் மற்றும் அரசு சார்பில் அடையாள அட்டைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் Swiggy, Zomato உள்ளிட்ட ஆன்லைன் செயலி ஊழியர்கள் 1 கோடி பேர் பயன்பெறுவர்”. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.