ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்று நடைபெறும் 9 ஆவது லீக் ஆட்டத்தில் இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை சென்னை சேப்பாக்கத்தில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
அதே சமயம் ஆப்கானிஸ்தான் அணி வங்கதேசத்திற்கு எதிரான தனது முதல் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. டெல்லி மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கக் கூடும் என்பதால் இன்று இந்திய அணியில் மூன்று ஸ்பின்னர்கள் களமிறங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி சுப்மன் கில்லுக்கு டெங்கு உறுதியானதைதொடர்ந்து அவர் கடந்த இந்தியா, ஆஸி போட்டியில் பங்கேற்கவில்லை.
நேற்று முந்தைய தினம் நள்ளிரவு இரத்தத்தில் தட்டணுக்கள் குறைவு காரணமாக அவர் சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு சென்னையில் உள்ள தனியார் விடுதியில் அவர் ஓய்வெடுத்து வருகிறார்.
இருப்பினும் மருத்துவர்கள் சுப்மன் கில்லுக்கு ஓய்வு தேவை என அறிவுறுத்தியதை அடுத்து, டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா, ஆப்கான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார். அதே போல வரும் 14 ஆம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியிலும் அவர் பங்கேற்க மாட்டார் என கூறப்படுகிறது.இந்திய அணியை பொறுத்தவரை ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர், கே எல் ராகுல் (வி,கீ), ஹர்திக் பாண்டியா (து. கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் மற்றும் பும்ரா என ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்கிய அதே யூனிட் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை ஒருநாள் போட்டிகளில் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பின்னர் 4 வருடங்கள் கழித்து இந்தியாவுடன் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. அனுபவம் வாய்ந்த பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் இருப்பினும் இன்றைய போட்டி இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாகவே பார்க்கப்படும்.






