என் உயிர் இருக்கும் வரை நான் உழைப்பேன் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாகக் கொங்கு மண்டலம் சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஈரோடு பயணம் மேற்கொண்டார். அப்போது நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஈரோடு மாவட்டம் தமிழர்களில் உயிரோடு கலந்த ஊர். பெருந்துறை வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதி எனத் தெரிவித்தார். மேலும், அமைச்சர் முத்துசாமி சிறப்பாக பணியாற்றியாற்றி வருபவர் எனத் தெரிவித்த அவர், கடந்த ஓராண்டில் எண்ணற்ற திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது எனக் கூறினார்.
ஈரோடு மாநகராட்சியில் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட 2 பேருந்து நிலையங்கள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்த அவர், ஈரோட்டில் சுற்று வட்டார சாலை நீடிக்கப்படும். திட்ட அறிக்கை தயாரிக்க 60 லட்சம் ரூ ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறினார். மேலும், ஈரோட்டில் 2 கோடி மதிப்பில் குளிர் பதனகிடங்கு அமைக்கப்படும், தாளவாடியில் 24 மணி நேரம் செயல்படும் ஆரம்பச் சுகாதார நிலையம் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.
https://twitter.com/news7tamil/status/1563060602813132801
தொடர்ந்து பேசிய அவர், அத்திக்கடவு அவினாசி திட்டம் நிறைவடைந்ததும், நானே வந்து திறந்து வைப்பேன், அரசு விழா பொழுது போக்கு விழா அல்ல என் உயிர் இருக்கும் வரை நான் உழைப்பேன். அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி அதுவே திராவிட மாடல் ஆட்சி எனக் கூறினார். மேலும், நெல் உற்பத்தியில் 20 ஆண்டுகளாக இல்லாத விளைச்சல் அடைந்துள்ளது. இந்த அரசு மக்களை காப்பாற்றும் அரசாக மட்டும் அல்லாமல் மண்ணை காப்பாற்றும் அரசாகவும் திகழ்கின்றது எனக் கூறிய அவர், இந்த அரசு சம நீதியைக் காக்கும் அரசு. திரவிட மாடல் அரசு இந்தியாவிற்கே வழிகாட்டும் அரசாக உள்ளது எனக் கூறினார்.







