தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு வெளியான நிலையில், ஆதரவாளர்களுடன் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆன்மாக்களுக்கு அதிமுக தொண்டர்களின் வணக்கம். தொண்டர்களின் இயக்கமாக, யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக அதிமுகவை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவாக்கினார்கள் எனக் கூறினர்.
தொடர்ந்து பேசிய அவர், வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைச் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது. சில மாதங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட அசாதாரணமான சூழலில், நீதிமன்றம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது எனத் தெரிவித்த அவர், தொண்டர்களின் இயக்கத்தை யார் பிளவுபடுத்த நினைத்தாலும் அது நடக்காது. சர்வாதிகாரமும் நடக்காது. இது அதிமுகவுக்குக் கிடைத்த முழுமையான வெற்றி எனத் தெரிவித்தார்.
மேலும், அனைவரும் ஒன்றுபட வேண்டும் எனக் கூறிய அவர், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்த்திருக்கிறோம். நீதிமன்ற தீர்ப்பை மதித்து நடப்போம். அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தலைமையின் பண்பு எனக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் கட்சியை வழிநடத்துவேன் எனவும், அதிமுக ஒரே இயக்கம் தான் எனவும் கூறினார். அப்போது, பொதுக்குழு கூட்டுவதற்கு வாய்ப்பு உள்ளதா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குத் தேவைப்பட்டால் மீண்டும் ஆலோசித்து பொதுக்குழுவைக் கூட்டுவோம். தொண்டர்களின் விருப்பப்படியும், தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியுமே எதிர்கால நடவடிக்கைகள் அமையும் எனக் கூறினார்.








