ஒரு தலைவரின் உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை அமைந்திருந்ததாக பாக். முன்னாள் தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை இந்திய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்க்கக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, இந்தியாவை வெறுக்கக்கூடிய பாகிஸ்தானிலும், பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் தூதரக அதிகாரியும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதராக இருந்தவருமான அப்துல் பசித், பிரதமர் நரேந்திர மோடியின் சுதந்திர தின உரை குறித்து புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த பேச்சாளராக விளங்குவதாகவும், அவரது உரை எப்போதுமே ஈர்க்கக்கூடியதாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். பொது மக்களை கவரக்கூடியவராகவும், தனது பேச்சின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவராகவும் பிரதமர் மோடி திகழ்வதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
பல புதிய விஷயங்களை மிக இயல்பாக பிரதமர் நரேந்திர மோடியால் சொல்ல முடிகிறது என தெரிவித்துள்ள அப்துல் பசித், அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வளர்ந்த நாடாக்க வேண்டும் என்பது குறித்தும், ஊழல் ஒழிப்பு குறித்தும், பெண்கள் முன்னேற்றம் குறித்தும் அவரால் மிக இயல்பாக பேச முடிகிறது என குறிப்பிட்டுள்ளார். ஒரு தலைவரின் உரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உரை அமைந்திருப்பதாக அப்துல் பசித் கூறியுள்ளார்.
அதேநேரத்தில், அனைத்து அடிமைத்தன குறியீடுகளில் இருந்தும் இந்தியா விடுதலை பெற வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என அப்துல் பசித் தெரிவித்துள்ளார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட அடிமைச் சின்னங்கள் குறித்து அவர் பேசுகிறாரா அல்லது அதற்கு முன்பு முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சின்னங்கள் குறித்தும் பேசுகிறாரா என்பது விளங்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை குறித்தும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் அடிக்கடி புகழ்ந்து பேசி வருகிறார்.
இரு தினங்களுக்கு முன்பு லாகூரில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய இம்ரான் கான், அமெரிக்காவுடன் நட்புறவை வளர்த்துக்கொண்டே ரஷ்யாவுடனும் நட்புறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவால் முடிவது குறித்து ஆச்சரியம் தெரிவித்திருந்தார்.
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது என இந்தியாவுக்கு அமெரிக்கா கட்டுப்பாடு விதிக்க முயன்றபோது அதனை ஏற்க இந்தியா மறுத்ததை அவர் வெகுவாக பாராட்டினார். இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் உரையை, பொதுக்கூட்ட மேடையில் திரை அமைத்து அவர் போட்டுக்காண்பித்தார்.
இந்தியாவுக்கு இருக்கும் துணிச்சல், அதன் வெளியுறவுக் கொள்கை எத்தகைய சுதந்திரத்தைக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டி இருப்பதாக தெரிவித்த இம்ரான் கான், இவ்விஷயத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை அடிமைத்தனத்தைத்தான் வெளிப்படுத்தி இருக்கிறது என சாடியுள்ளார்.









