காலில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலும் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு நிச்சயம் வருவேன் என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 2022 ஆம் ஆண்டு இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்த பிறகு , அவருக்கு எதிராக பல்வேறு விவகாரங்களில், 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக பரிசு பொருட்கள் முறைகேடு வழக்கில் கடந்த மாதம் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்ததால் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியில் வர முடியாத படி கைது வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இம்ரான் கானை கைது செய்வதற்காக லாகூரில் உள்ள அவரது வீட்டுக்கு போலீசார் சென்றபோது, அங்கு போலீசாருக்கும், இம்ரான் கான் கட்சி தொண்டர்களுக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக சட்ட ஒழுங்கு பிரச்சனை வந்து விடக்கூடாது என நீதிமன்றம் கைது உத்தரவை நிறுத்தி வைக்கு மாறு உத்தரவிட்டது. பின்னர் லாகூர் நீதிமன்றத்தில் ஆஜரான இம்ரான் கான் 8 பயங்கரவாத வழக்குகள் உட்பட அடுத்தடுத்த நாளே பல்வேறு வழக்குகளில் ஜாமீன் பெற்றார்.
இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள மற்றொரு வழக்கான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் எம்.பி மொஹ்சின் ஷாநவாஸ் ரஞ்சாவால் தொடர்ந்த கொலை முயற்சி வழக்கு, நேற்று இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த முறையும் வழக்கம் போல் இம்ரான் கான் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால், அதிருப்தி அடைந்த நீதிபதி அமீர் பரூக் ” வழக்கு விசாரணையின் போது இம்ரான் கான் கண்டிப்பாக நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். இல்லை எனில் அவரது இடைக்கால ஜாமினை ரத்து செய்ய நேரிடும் ” என கடுமையாக சாடியிருந்தார்.
இதனை தொடர்ந்து இன்று தனக்கு காலில் வலி மற்றும் வீக்கம் இருந்தாலும் வேதனையையும், வலியையும் பொருட்படுத்தாமல் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு நிச்சயம் நான் வருவேன் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். முன்னதாக இது தொடர்பாக சக்கர நாற்காலியில் அமர்ந்த படியான வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்த அவர், நீதிபதிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வராதபோது, அவர்களுக்கு எதிராக பிரசாரம் செய்பவர் நான் அல்ல என சூசகமாக பேசியிருந்தார். இதனால், இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்றத்திற்கு வரவுள்ளதை தொடர்ந்து உயர்நீதிமன்றம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- பி.ஜேம்ஸ் லிசா









