தேசியவாத காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வேண்டும் என்று விரும்புவதாக அந்த மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அஜித்பவார், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா – பாஜக கூட்டணியில் இணைந்தார். அஜித்பவார் துணை முதலமைச்சராகவும், அவரது ஆதரவாளர்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதனையடுத்து, மொத்தமுள்ள 53 எம்எல்ஏக்களில் 40 பேர் தங்களுக்கு ஆதரவாக உள்ளதாக அஜித் பவார் கூறியிருந்த நிலையில், யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை நிரூபிக்கும் வகையில், அஜித் பவார் மற்றும் சரத்பவார் தனித்தனியே ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர். அனைத்து கட்சி எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு இருவரும் தனித்தனியே அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில், பாந்த்ரா-வில் உள்ள எம்இடி மையத்தில் அஜித் பவாரின் கூட்டத்திற்கு 29 எம்எல்ஏக்களும், 3 எம்எல்சிக்களும், வந்திருந்தனர். அதே சமயம் ஒய்.பி.சவான் ஆடிட்டோரியத்தில் சரத் பவார் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு 14 எம்எல்ஏக்கள் வருகை புரிந்தனர்.
கூட்டத்தில் பேசிய அஜித் பவார், தனக்கு ஆதரவாக 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் உள்ளதாகவும், எதிர் கூடாரத்தின் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏக்களும் கூட தன்னுடன் இப்போதும் தொடர்பில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியை வழிநடத்தி, மகாராஷ்டிராவின் முதலமைச்சராக வேண்டும் என்று தாம் ஆசைப்படுவதாகவும் தெரிவித்தார். சரத் பவார் தான் தனக்கு ஹீரோ என்று அவர் ஆசீர்வதித்து எங்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறினார்.
இன்றைய கூட்டத்தில் தாம் குறைவாகவே பேசியுள்ளதாகவும், வருங்காலங்களில் எல்லாவற்றையும் கூற வேண்டிய நிலை ஏற்படலாம் என்று சரத் பவாருக்கு எச்சரிக்க விடுத்த அவர் வரும் சட்டமன்ற தேர்தலில் 90 இடங்களில் தனது தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அவர் அப்போது கூறினார்.
இதனிடையே தலைமை தேர்தல் ஆணையத்திடம் தேசிய வாத காங்கிரஸ் கட்சி மற்றும் சின்னத்திற்கு அஜித் பவார் உரிமை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், ஒய்.பி.சவான் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய சரத்பவார், உத்தவ் தாக்கரேவுக்கு நடைபெற்றது தற்போது மீண்டும் தனக்கு நடைபெற்றுள்ளதாக கூறினார். அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று தங்களுக்கு ஆசையில்லை என்றும் மக்களுக்காக தொடர்ந்து உழைப்போம் என்று கூறினார். அஜித் பவாருக்கு ஏதாவது பிரச்னை என்றால் என்னிடம் பேசியிருக்க வேண்டும் என்று கூறினார். தேசியவாத காங்கிரஸை ஊழல் கட்சி என விமர்சித்த நிலையில் அஜித் பவாரை இணைத்துக்கொண்டது ஏன் என்று பாஜகவுக்கு கேள்வி எழுப்பிய சரத் பவார், கட்சியினரும் கட்சியின் சின்னமும் தங்களிடம் தான் உள்ளதாகவும் தெரிவித்தார்.
பி.ஜேம்ஸ் லிசா









