மாமன்னனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிவீரன், மாரிசெல்வராஜ்!

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்த மாமன்னன் படக்குழு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,…

மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியைத்தொடர்ந்து நடிகர் வடிவேலுவை நேரில் சந்தித்த மாமன்னன் படக்குழு அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன்  29 ஆம் தேதி ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியானது. உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியான இப்படம், வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக வடிவேலுவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் படத்தின் வெற்றியை படக்குழு கேக் வெட்டிக் கொண்டாடியது. படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் சமூகநீதியை குறிப்பிட்டு பாராட்டினர். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா.ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்களும் பாராட்டினர். மேலும் இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ்-க்கு மினி கூப்பர் கார் பரிசளிக்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது வடிவேலுவை நேரில் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாரிசெல்வராஜ் இருவரும்  நன்றி கூறினர். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “தன் எதார்த்த மற்றும் தேர்ந்த நடிப்பால் மாமன்னன் திரைப்படத்தை மானுடம் போற்றும் சாதனைப் படைப்பாக்கிய  அண்ணன் வடிவேலுவை நேரில் சந்தித்து அன்பையும், நன்றியையும் தெரிவித்தோம்” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும் ரெட் ஜெயண்ட் நிறுவனம், “மாமன்னன் படத்தில் நடித்ததற்கு நன்றி. நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை; முழுமையாக வாழ்ந்துள்ளீர்கள். உங்களுடன் பணியாற்றியது பெருமையாக இருக்கிறது. என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருப்போம்” எனக் குறிப்பிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.