20 மாவட்டங்களில் காவிரி நீர் குடிநீர் ஆதாரமாக இருப்பதால், கோதாவரி – காவிரி நதி நீர் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் மற்றும் தர்மர் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல்வேறு ஆதரவாளர்கள் தலைமைச் செயலகம் வந்திருந்தனர்.
வேட்புமனு தாக்கல் நிறைவுற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செய்யபட்டு உள்ளனர், முன்னாள் அமைச்சர் சி வி சண்முகம், மற்றும் தர்மர் உள்ளிட்டோர் வேட்புமனு தாக்கல் செய்யபட்டு இருக்கிறார்கள். இந்த இருவருக்கும், அதிமுக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் ஆதரவு தந்துள்ளார்கள் என்றார்.
மேலும் அதிமுக சார்பில் பாஜக மற்றும் பாமக கட்சிகளுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, திமுக இன்று ஆட்சியில் எந்த முன்னேற்றமும் கொண்டு வரவில்லை, நாங்கள் போட்ட திட்டங்களை இன்று செயல்படுத்தி வருகிறார்கள் என குற்றம்சாட்டினார். நாங்கள் அடிக்கல் நாட்டிய திட்டங்களை எல்லாம் இன்று செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதல்வர் இந்தியாவிலேயே முதன்மை முதல்வர் என அவரே தெரிவித்து வருகிறார் என சாடினார்.
எதில் முதன்மை? ஊழலில் தான் முதன்மை. திமுக ஆட்சியால் பல்வேறு மாவட்டங்களில் இன்று கஞ்சா விற்பனை தீவிரமடைந்து இருக்கிறது. சுகாதார துறை அதிகாரிகள் கூட 102 டன் கஞ்சா பிடிபட்டு உள்ளது என தெரிவித்து இருக்கிறார்கள். கண்டுபிடிக்க பட்டதே இவ்வளவு எனும் போது, கண்டுபிடிக்கப் படாதது எவ்வளவு இருக்க கூடும்? என கேள்வி எழுப்பினார். கஞ்சா இருந்தால் தான் வழக்கே பதிவு செய்ய முடியும், அப்போது 2200 வழக்குகள் பதிவு செய்யபட்டு உள்ளது என சொன்னால், அவர்கள் ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கஞ்சாக்கள் எல்லாம் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் விற்பனை செய்ய படுகிறது. இதற்கு திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தமிழகம் மோசமான சூழ்நிலைக்கு சென்று விடும். ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதிக்க கூறி தானும் அறிக்கை வெளியிட்டு உள்ளேன். ஆன்லைன் விளையாட்டு தடை செய்ய தனி சட்ட திருத்தம் நீதிமன்றத்தில் திமுக அரசு கொண்டு வர வேண்டும். டிஜிபியே இதை தடை செய்ய கோரி அறிவிக்கிறார், ஆனால் இந்த விடியா அரசு இன்னும் தூங்கி கொண்டிருக்கிறது என சாடினார்.
டிஜிபி இதைப்பற்றி சொல்லும் போது, தமிழக அரசு ஏன் இன்னும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.சென்னை மாநகர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழகமே சட்டம் ஒழுங்கில் சீரழிந்து விழுந்துவிட்டது. டிஜிபி கையானது கட்டப்பட்டு இருக்கிறது. காவல்துறைக்கு ஆளுங்கட்சி தலையீடு அதிகம் இருப்பதால் டிஜிபி தலையிட முடியவில்லை என தெரிவித்தார்.
பிரதமரை தான் சந்தித்த போது, பல்வேறு மாவட்டங்களில் நூல் விலையினால் விசைத்தறி கைத்தறி தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதை சுட்டிக்காட்டினேன். இதனால் தொழில் கடுமையாக பாதிக்க பட்டுள்ளது என்று பிரதமரை சந்தித்த போது தெரிவித்தேன். இதேபோல், 20 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக இருப்பது காவிரி நதிநீர் தான், எனவே கோதாவரி காவிரி நதி நீர் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்தியதாகவும் பழனிசாமி தெரிவித்தார்.









