செஞ்சி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனி பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட இயக்குனர் பாக்யராஜ், தயாரிப்பாளர் கே ராஜன், திரைப்பட இயக்குநர் பேரரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேடையில் பேசிய இயக்குனர் பேரரசு கூறியதாவது:
தமிழ் சினிமாவில் சாதனை இயக்குனர் என்றால் 5, 6 பேர் தான். அதில் பாக்கியராஜ் ஒருவர். அவருடன் உதவி இயக்குனராக பணியாற்ற முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை.
செஞ்சி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நான் வைத்திருந்த தலைப்பு. நீங்கள் எடுத்துக் கொண்டீர்கள். செஞ்சியில் தேசிங்கு ராஜா, அவரது மனைவி, அவரது குதிரைக்கும் அங்கு சிலை உள்ளது. செஞ்சியில் தான் குதிரைக்கும் சிலை உள்ளது.
இயக்குனர் கே.பாக்யராஜ் பேசுகையில், “பேப்பரை படித்தால் காமெடியாக உள்ளது. வெற்றிகரமாக மூன்றாவது நாள் என்று விளம்பரம் செய்கின்றனர். 100 நாள், 150 நாட்கள் என்று இருந்த காலம் போய் தற்போது இப்படி இருக்கிறது. விரைவில் மூன்றாவது காட்சி என்று வந்து விடுமோ என்று வருத்தமாக உள்ளது.
ஒரு விதத்தில் இது மகிழ்ச்சியாக உள்ளது. தமிழ் படங்கள் இந்தியா மட்டும் அல்லாமல் எல்லா ஊர்களுக்கும் சென்று நல்ல மரியாதையை சம்பாதித்து வருகிறது.
கள்ள நோட்டு என்பது சிலர் தான் அடிக்கிறார்கள். ஆனால் நல்ல நோட்டு, நல்ல மனிதர்களையும் மாற்றி விடுகிறது. சினிமா என்பது பொது அறிவு தான். தைரியமும் பொது அறிவும் சினிமாவிற்கு முக்கியம்.
Experiment என்று சொன்னாலே அது தமிழில் தான் பண்ண முடியும். பலர் அதை செய்து வெற்றி பெற்றுள்ளனர் என்றார் பாக்யராஜ்.








