செஸ் ஒலிம்யிட் போட்டி நடக்கும் அரங்கத்தை ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூருடன் செஸ் விளையாடினார்.
செஸ்ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நாளை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. பிரதமர் மோடி கலந்து கொண்டு செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து போட்டிகள் நாளை மறுநாள் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் பிரம்மாண்ட அரங்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறும் அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவற்றை கேட்டு தெரிந்து கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடன் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் மெய்ய நாதன், பொதுப்பணி துறை அமைச்சர் எ வ வேலு, சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சர் மதிவேந்தன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர் உடன் செஸ் விளையாடி, அதன் பின் புறப்பட்டு சென்றார்.
இறுதியாக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பங்கேற்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் உடன் தனியார் நட்சத்திர விடுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.







