“வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை” – மேக்னஸ் கார்ல்சன் பேட்டி

வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என செஸ் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார். அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE சதுரங்க உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று…

வயிற்றுப் பிரச்னை காரணமாக நான் அதிக ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என செஸ் கிராண்ட்மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சன் தெரிவித்துள்ளார்.

அஜர்பைஜானில் நடைபெற்று வரும் FIDE சதுரங்க உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் உலகின் நம்பர் ஒன் வீரர் மற்றும் 5 முறை உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சன், இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா ஆகியோர் மோதி விளையாடி வருகின்றனர். இந்த இறுதிப்போட்டியின் இரண்டாம் சுற்று, இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெறவுள்ளது.

இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று மாலை 4.30 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 7.22 மணிக்கு போட்டி நிறைவுற்றது. 35-வது நகர்வில் இருவரும் சமன் செய்துகொள்ள ஒப்புக்கொண்டனர். இதனால் ஆட்டம் சமன் செய்யப்பட்டது. முதல் சுற்று போட்டியில் இருவரும் சமன் செய்ததால், இன்று நடைபெறும் இரண்டாவது சுற்று போட்டியில் வெற்றி பெறுபவரே சாம்பியன் பட்டம் வெல்வார். இதனால் இன்றைய போட்டி கூடுதல் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கக்கூடும்.

கிளாசிக் செஸ் முறையில் தனது கரியரில் இரண்டாவது முறையாக கார்ல்சனுடன் நேற்றைய போட்டியில் வெள்ளை நிற காய்களை கொண்டு களமிறங்கிய பிரக்ஞானந்தா, நேற்றைய போட்டியில் சற்று முன்னிலையில் இருந்தார்.

சரியாக 35-வது நகர்வுக்கு பின் போட்டியை கடினமாக்க விரும்பாத இருவரும் சமன் செய்ய முன் வந்தனர். போட்டிக்கு பிறகு பிரக்ஞானந்தாவிடம் அவரது ஆட்டம் குறித்து கேட்டபோது, “நான் அங்கு ஏதாவது செய்திருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். ஆனால் இந்த நிலையே உறுதியானது. நான் அங்கு விளையாடியது எனது சிறந்த முயற்சியும் அல்ல, அதே சமையம் எந்த தவறுகளையும் செய்ததாக தோன்றவில்லை” என்றார்.

இதையும் படியுங்கள் : உலகமே எதிர்பார்க்கும் அந்த தருணம்… – இன்று மாலை நிலவில் கால்பதிக்கிறது ’சந்திரயான்-3’-ன் விக்ரம் லேண்டர்!!

இன்றைய போட்டி குறித்து கேட்டபோது, “கார்ல்சன் மிகவும் கடுமையான ஆட்டத்தை வெளிப்படுத்துவார். நான் ஓய்வு எடுத்த பின்பு நாளை புத்துணர்ச்சியுடன் வருகிறேன். என்னால் முடிந்ததை நான் நிச்சயம் செய்வேன்” என்று தெரிவித்தார்.

பிரக்ஞானந்தாவுடனான போட்டிக்கு பிறகு பேசிய மேக்னஸ் கார்ல்சன், ”நேற்று அவர் ஒரு கடினமான டைபிரேக்கர் விளையாடினார். அதே வேளையில் நான் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தேன். இதில் எனக்கு ஒரு நன்மை இருந்திருக்கக்கூடும். ஆனால் கடந்த இரண்டு நாட்களாக நான் மிகவும் கடினமான நிலையில் இருந்தேன்.

அபாசோவுக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு, நான் அருந்திய உணவு ஒத்துப்போகாததால் எனக்கு வயிற்று பிரச்னை ஏற்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக என்னால் சாப்பிட முடியவில்லை. எனக்கு ஆற்றல் ஏதும் இல்லாததால் நான் மிகவும் அமைதியாக இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்” என்று கூறினார்.

இரு போட்டியாளர்களும் பலமான மனநிலையுடன் இன்று மாலை இறுதிப்போட்டியின் இரண்டாவது சுற்றை எதிர்கொண்டு விளையாட உள்ளனர். இன்று வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டம் வெல்வார். அதுமட்டும் இன்றி, சாம்பியன் பட்டம் வெல்லும் நபருக்கு 1,10,000 அமெரிக்கா டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு $80,000 அமெரிக்கா டாலர்கள், இந்திய மதிப்பில் 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.