மழை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்களுக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை என தெரிவித்தார்.
ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில் சென்னை கொளத்தூர் தொகுதியில் கனமழை பாதிப்புகள் குறித்தும், நிவாரண பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.1) ஆய்வு மேற்கொண்டார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாட்டில் எந்தெந்த பகுதி மழையால் பாதிக்கப்பட்டு என்பது குறித்தும் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் செய்யப்பட்டுள்ள நிவாரணப் பணிகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

அவசரகால செயல்பாட்டு மையத்தில் மேற்கொண்ட ஆய்விற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
“சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் 21 சுரங்கப்பாதைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. கணேசபுர சுரங்கப்பாதையில் ரயில்வே மேம்பாட்டு பணி நடைபெற்று வரும் நிலையில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் 32 முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 1018 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு இன்று 9 லட்சத்து 10 ஆயிரம் உணவுப் பொட்டணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
386 அம்மா உணவகங்கள் மூலமாக ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 47 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 22,000 பேர் மழைக்கால மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். குடிநீர் வழங்கல், கழிவுநீர் அகற்றும் பணியில் 2,149 களப்பணியார்கள் மேற்கொண்டு வருகின்றனர். எதையும் எதிர்கொண்டு சமாளிக்கும் வகையில் சென்னை தயார் நிலையில் உள்ளது. கொளத்தூரில் கடந்த காலங்களில் மழைநீர் தேங்கும் பகுதிகளில் தற்போது எங்கும் மழைநீர் தேங்கவில்லை. இதனை மக்களே தெரிவித்தனர். மற்ற மாவட்டங்களின் நிலையை அதிகாரிகள் மூலம் அறிந்து கொண்டுள்ளேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து கொளத்தூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “எனது தொகுதியை பார்வையிட வந்துள்ளேன். அனைத்து துறை அமைச்சர்கள், மற்றும் அதிகாரிகள் ஆகியோரில் எனது உத்தரவின்பேரில் களத்தில் இறங்கி பணி செய்து கொண்டிருக்கிறார்கள்” என தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு உங்கள் பதில் என்ன பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்களை மதிப்பதே இல்லை எனவும் அதனை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை எனவும் தெரிவித்தார்.







