சவுகார் ஜானகி… எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பண்பட்ட நடிகை. சோகம் படிந்த முகத்துடன், அழுது புலம்பும் கண்களுடன் கூடிய ஒரு நடிகையை.. புதிய பறவை திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நவீனம் பேசும் நடிகையாக மாற்றினார் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், நம்பிக்கையுடன் வாய்ப்பளித்தார் சிவாஜி கணேசன்.
புதிய பறவை திரைப்படத்திற்காக நடிகர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து உடைகள் வரவழைக்கப்பட்டன.. அப்போது ஏற்கனவே தான் சிங்கப்பூரில் வாங்கிய கருவண்ண புடவையில் எம்பிராய்ட் செய்து அணிந்து, பார்த்த ஞாபகம் இல்லையோ என்ற பாடல் காட்சியில் அசத்தியிருப்பார் சவுகார்…
பாடல் காட்சியின்போது, ஆப்பிரிக்காவில் இருந்து வந்த இசைக்குழுவை அமர வைத்து படமாக்கினார்கள். வழக்கமான ஆட்டம், பாட்டம் இல்லாமல் நாயகன் சிவாஜி, இருக்கையில் ஸ்டைலாக புகைத்தபடி இயல்பாக நடித்திருப்பார். சொந்த தயாரிப்பாக இருந்தாலும் சென்னையில் உள்ள தனது சாந்தி திரையரங்கில் புதிய பறவை திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. சங்கம் என்ற இந்தித் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததால், அந்த படத்துக்கு இடையூறு ஏற்படுத்தாமல், பாரகன் திரையரங்கில் வெளியிட்டார் சிவாஜி..
1958ம் ஆண்டு வெளியான Chase a Crooked Shadow என்ற பிரிட்டிஷ் திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட வங்காளத் திரைப்படமே புதிய பறவையாக கதையாக்கம் செய்யப்பட்டது. திரைப்படத்தின் மிக முக்கியமான பாடலான எங்கே நிம்மதி பாடலுக்காக 100 வயலின்களை பயன்படுத்தியிருந்தனர் மெல்லிசை மன்னர்களான விஸ்வநாதன் – ராமமூர்த்தி. பாடலை படமாக்கியபோது வில்லியான சித்ரா கதாபாத்திரத்தில் சவுகார் வரும் காட்சியில் ஒலி முதல் ஒளி வரை மிரட்டியிருப்பார் இயக்குநர் தாதா மிராசி. அதே நேரத்தில் மற்றொரு கதாபாத்திரமான லதா என்ற சரோஜாதேவி வரும்போது மெல்லிய தென்றலென இசையும், மிக குளிர்ந்த ஒளியும் சிறப்பு சேர்த்திருக்கும்…
முதல் முறையாக ஒரு திரைப்படத்தை பார்க்கும்போது உள்ள பரபரப்பு, அடுத்தடுத்து பார்க்கும்போது இருக்குமா என்பது சந்தேகமே… ஆனால், பலமுறை பார்த்தாலும் அதே விறுவிறுப்பு, பரபரப்பு இருக்கும் ஒருசில திரைப்படங்களில் ஒன்று புதிய பறவை.








