ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற மூன்றாவது லீக் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதனால் ரன் குவிக்க தடுமாறிய சென்னை அணி 19. 4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த 127 ரன்கள் சேர்த்து.
தொடர்ந்து 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 12.1 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது.
சென்னை அணியிலிருந்து ராஜஸ்தான் அணிக்கு மாற்றப்பட்ட ஜடேஜா இன்று தனது முதல் போட்டியில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்ரிக்கு உதவினார்.
போட்டியின் நடுவே சென்னை அணி தடுமாறும் போதும், ரசிகர்கள் ஜட்டு என்று அவரின் பெயரை கூறி அழைக்கும் போதும் சென்னை அணியின் முன்னாள் வீரரான ஜடேஜா எமோஷனலாக காணப்பட்டார்.
தொடர்ந்து போட்டி குறித்து பேசிய ஜடேஜா பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதாவது ; “பிங்க் நிறம் எனக்கு அழகாகப் பொருந்துகிறது என்று நினைக்கிறேன். எனக்கு சிவம் தூபேவை நீண்ட காலமாகத் தெரியும்… அவர் பெரிய ஷாட்களை ஆட முயற்சிப்பார் என்று எனக்குத் தெரியும், அதனால் தான் நான் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீச முயன்றேன்”என்றார்.
தொடர்ந்து போட்டி அட்டவணை வெளியான போது, சென்னை அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் பேசினீர்களா என்ற கேள்விக்கு அவர், “இல்லை, நான் அவரிடம் பேசவில்லை. மஹி பாய் (தோனி) எப்படியும் தனது தொலைபேசியை அணைத்து வைத்திருப்பார். நான் மஹி பாயைச் (தோனி) சந்திக்கும்போதெல்லாம், அவரிடம் நிறைய பேசுவேன்” என்று பதிலளித்தார்.







