நான்கு ஆண்டுகளாக நான் சம்பாதிக்கவில்லை என்று பிரபல நடிகர் மாதவன் தெரிவித்தார்.
மின்னலே, ரன், இறுதிச்சுற்று என பல தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மாதவன். இவர் கடைசியாக “மாறா” என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் ஓடிடி தளமான அமேஸான் பிரைமில் நேரடியாக வெளியானது. மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் ரீமேக் தான் மாறா. இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இவர் தமிழில் நடித்து கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் விக்ரம் வேதா.
அந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார். படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கைக் கதையை படமாக்கும் பணியில் கடந்த சில ஆண்டுகளாக மாதவன் ஈடுபட்டு வந்தார். இந்தப் படத்தை எழுதி இயக்கியதுடன், நம்பி நாராயணனாகவும் அவர் நடித்திருக்கிறார். ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் தயாராகியுள்ளது.
“ராக்கெட்ரி: நம்பி விளைவு” என தலைப்பு வைக்கப்பட்டுள்ள அந்தப் படம் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. பின்னர், அவர் ஆன்லைன் செய்தி தளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நான் ஒரு ரூபாய் கூட சம்பாதிக்கவில்லை. கொரோனா காலத்துக்கு முன் நான் படத்தை இயக்கி நடித்துக் கொண்டிருந்தேன். ஓடிடி மட்டுமே என்னை தொடர்ந்து சினிமாவில் தக்க வைத்து வருகிறது என்று கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்பு ரகசியங்களை வெளிநாட்டு விற்றதாக விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு எதிராக குற்றச்சாட்டு எழுந்தது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவரை உச்சநீதிமன்றம் நிரபராதி என தீர்ப்பளித்து விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கதையைத்தான் மாதவன் நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக் கான், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.








