நீட் தேர்வு தொடர்பாக தமிழக மக்களின் மனநிலை குறித்தும் , நீட் தேர்வு விலக்கு
குறித்தும், பிரதமரிடம் எடுத்துரைத்ததாக தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்துள்ளார்.
அரசுமுறை பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லியிலுள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் சந்தித்தார் .
சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழகம் சார்ந்த
பல்வேறு முக்கிய விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தெரிவித்தார். குறிப்பாக, தமிழக முதல்வரின் உடல்நலம் குறித்து பிரதமர் விசாரித்ததாக அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
இதனையும் படியுங்கள்: பிரதமர் மோடியுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது..
அடுத்த கேலோ இந்தியா விளையாட்டை தமிழகத்தில் நடத்த கோரிக்கை
வைத்துள்ளோம். மத்திய அரசுத்துறை வேலைகளில் தமிழர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.
நீட் தொடர்பான தமிழக மக்களின் நிலைப்பாடு, மனநிலை தொடர்பாகவும் பிரதமரிடம்
எடுத்துரைத்தேன். அனைத்தையும் பிரதமர் மோடி கவனமுடன் கேட்டுக்கொண்டார். மேலும் இந்திய விளையாட்டு ஆணையம் (SAI) அமைப்பின் கிளையை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என்று பிரதமரிடம் கோரிக்கை வைத்தேன். தமிழகத்தில் மாவட்டம் தோறும் விளையாட்டு மைதானம் அமைப்பது தொடர்பான திட்டம் குறித்தும் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பிரதமரிடம் எடுத்துரைத்துள்ளேன்.

இதனையும் படியுங்கள்: மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங் உடன் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!
மதுரை எய்ம்ஸ் வரும் 2026ல் முடிவடையும் என ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளது. எனவே
இந்த விவகாரத்தில் நான் ஏற்கனவே கூறியது போல நிதி ஒதுக்கவில்லை என்பது உண்மையாகியுள்ளது.” என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
– யாழன்







