”நடிகர் சித்தார்த்திடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் “ என கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட ஆதரவு அமைப்பினர் இன்று கர்நாடகாவில் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
இதேபோல மாண்டியாவிலும் பெங்களூரிலும் ஏற்கனவே முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்ற நிலையில், கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டத்தை பல்வேறு சங்கங்கள் நடத்தி வருகின்றன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்கவும் மாநிலம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தவும் டி.ஜி.பி., அலோக் மோகன் உத்தரவிட்டிருந்தார். இதன் தொடர்ச்சியாக பெங்களூருவில் சனிக்கிழமை இரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு விதிக்கப்படுவதாக மாநகர காவல்துறை ஆணையர் தயானந்த் அறிவித்தார்.
இந்த நிலையில் நடிகர் சித்தார்த்தின் சித்தா நடித்த படம் நேற்று தமிழ், மலையாளம் மற்றும் கன்னடா உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியானது. இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பு கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே கர்நாடக மாநில காவிரி போராட்ட குழுவினர் திடீரென உள்ளே புகுந்து முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பாதிலேயே நடிகர் சித்தார்த் வெளியேறினார்.
நடிகர் சித்தார்த் நிகழ்ச்சியில் கன்னட அமைப்பினர் முழக்கங்கள் எழுப்பிய நிலையில் அவருக்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் குரல் எழுப்பியிருந்தார். இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் பிரகாஷ் ராஜ் “ பல தசாப்தங்களாக காவிரி பிரச்னையைத் தீர்க்கத் தவறிய அரசியல் கட்சிகளையும் அதன் தலைவர்களையும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கேள்வி கேட்பதற்குப் பதிலாக.. சாமானிய மக்களையும், திரைக் கலைஞர்களையும் இப்படி தொந்தரவு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு கன்னடராக .. கன்னடர்கள் சார்பாக. மன்னிக்கவும் “ என பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்,
நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமாரும் நடிகர் சித்தார்த்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இன்று கன்னட அமைப்பினர் நடத்திய ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட நடிகர் சிவராஜ் பேசியதாவது..
” காவிரி நீர் விவகாரத்தில் தார்மீக அடிப்படையிலும், விவசாயத்தை கருத்தில் கொண்டும் நீர் வேண்டும் என நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். இந்த போராட்டம் நியாயமானது. ஆனால் அதேநேரத்தில் நடிகர் சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்கு நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். கன்னட மக்கள் மிகவும் நல்லவர்கள். மதம், இனம், மொழி மற்றும் மாநிலங்களை கடந்து சினிமாவை ரசிக்கக் கூடியவர்கள்தான் கர்நாடக மக்கள் “ என சிவராஜ் குமார் தெரிவித்துள்ளார்.







