இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக வர வேண்டும் என்று பணியாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4ம் நாளாக நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சட்டப்பேரவையில், நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் பட்ஜெட் தாக்கல் செய்து பாராட்டை பெற்றிருக்கிறார்கள் என்றும், வெளிநாடுகளே பாராட்டும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக்கொண்டிருப்பதாகவும் பேசினார்.
மேலும், பல துறைகள் இருந்தாலும் அதில் முக்கியமானது நிதித்துறை என கூறிய அவர், அதில் தனது அனுபவங்களை வைத்து பட்ஜெட்டை தாக்கல் செய்து பாராட்டுக்குரியவராக விளங்குகிறார் என் அன்புக்குரிய சகோதரர் பழனிவேல் தியாகராஜன் எனவும் பெருமிதம் தெரிவித்தார். அதேபோல், வேங்கை மைந்தனாக இல்லாமல், விவசாயிகளின் மைந்தனாக மாறி வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ள அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கும் தனது பாராட்டுக்கள் எனவும் முதலமைச்சர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், இன்றைய சூழலில் இலங்கைத் தமிழர்கள் பல இன்னல்களுக்கு ஆளாகியிருப்பதாக குறிப்பிட்டார். இலங்கையிலிருந்து பலர் அகதிகளாக தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருப்பதாகவும், இதை சட்டரீதியாக கையாள்வது குறித்து ஒன்றிய அரசுடன் பேசி வருவதாகவும், விரைவில் விடிவுகாலம் வரும் எனவும் உறுதியளித்தார்.
மேலும், அபுதாபி பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு எதிர்க்கட்சிகள் உட்பட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய முதலமைச்சர், நம்பர் ஒன் முதலமைச்சர் என்பதல்லாமல், இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக வர வேண்டும் என்று தான் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு தனது அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும் என்றும் அவர் தெரிவித்தார்.







