சனாதனம் குறித்த பேச்சு தொடர்பாக எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு ஊக்கதொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
”யாரையும் சாமி கும்பிடக்கூடாது என்று நாங்கள் சொல்லவே இல்லை. ஜாதியை வைத்து கொண்டு எல்லோரையும் கோயிலுக்குள் அனுமதிக்காமல் இருந்தனர். அதற்கு சட்டப்படி போராட்டம் நடத்தினோம். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் மீறி உரிமையை பெற்று தந்துள்ளோம்.
அன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நான் கூறினேன். தற்போது அதைவிட அதிக உறுதியுடன் உள்ளேன். எத்தனை வழக்குகள் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளேன். நான் பேசாத வார்த்தைகளை அவர்கள் கூறுகிறார்கள். சமூக வலைதளங்களில் நான் பேசிய காணொளிகள் உள்ளது. நான் பேசியதை மாற்றி சூழ்ச்சி செய்கிறார்கள்.
காங்கிரஸ் முக்த்பாரத் என பிரதமர் மோடி கூறுகிறார். அதற்கு அவர் அந்த கொள்கையை எதிர்க்கிறார் என்பது தான் பொருள். அது இனப்படுகொலை என்றால் நான் பேசியதும் இனப்படுகொலை தான். சனாதனம் என்பது நிலையானது, மாற்ற முடியாது என்று அவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் படிக்கக்கூடாது வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என்றார்கள். இப்போது பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறார்கள்.
திமுக தொடங்கப்பட்டது சமூக நீதிக்காக தான். எந்த மதத்திற்கு எதிராகவும் நான் பேசவில்லை, மதத்திற்குள் இருக்கக்கூடிய ஜாதி பாகுபாடுகளை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் திமுக பேசுகிறது.”
இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.







