புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகிபாபு மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர், யோகி பாபு. இவரது காமெடிகளில் தனித்துவம் கலந்த சென்னை ஸ்லாங் இருக்கும். யதார்த்தம் இருக்கும். ஆரம்பத்தில் லொள்ளு சபா என்னும் தொலைக்காட்சித்தொடரில் துணை நடிகராக நடித்து, ஸ்கிரிப்ட் ஒர்க், சினிமாவில் சிறு சிறு ரோல் எனப் படிப்படியாக நடித்து, இப்போது காமெடி நடிகர்களில் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை சம்பாதித்து இருப்பவர், நடிகர் யோகி பாபு.
அதேபோல், மண்டேலா, பொம்மை நாயகி, லவ் டுடே ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து அனைவரையும் தனது நடிப்பால் ஈர்த்து இருந்தார். இந்நிலையில், புதுச்சேரி அடுத்த அரியாங்குப்பத்தில் எழுந்தருளியுள்ள முத்து மாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நகைச்சுவை நடிகர் யோகி பாபு கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நடிகர் யோகிபாபு பூங்கொத்து கொடுத்தார்.







