தெலுங்கானா மாநில இடைநிலைத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் ஃபர்ஸ்ட் கிளாஸில் பாஸ் ஆகியுள்ளனர்.
தெலுங்கானாவில் இடைநிலை வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மே மாதம் நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்தத் தேர்வில் ஐதராபாத்தை அடுத்துள்ள யூசுஃப்குடா பகுதியைச் சேர்ந்த இடைநிலை 2ஆம் ஆண்டு படித்து வந்த இரட்டைச் சகோதரிகள் வீணா, வாணி முதல் நிலையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
தலை ஒட்டிப் பிறந்த இவர்கள் பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல் பிரிவுகளை முதன்மைப் பாடமாக தேர்வு செய்து படித்து வந்தனர். முதல் நிலையில் தேர்ச்சி பெற்றுள்ள இவர்கள் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிப் பாடங்களிலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
இதில், வாணி 712 மதிப்பெண்களையும், வீணா 707 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இவர்களை தெலுங்கான மாநில பழங்குடியினர் மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் சத்யாவதி ரத்தோட் பாராட்டியுள்ளார். மேலும், இவர்களது உயர் கல்விக்கான அனைத்து உதவிகளையும் அரசு வழங்கும் என்றும் உறுதி அளித்துள்ளார்.
-ம.பவித்ரா







