கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கையாக 4 மணி நேரத்தில் 50 ஆயிரம் முகக்கவசம்
மற்றும் துண்டு பிரசுரம் வழங்கும் பிரச்சாரம் நிகழ்ச்சியை சென்னை மயிலாப்பூர்
லஸ் கார்னர் பகுதியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.
லஸ் கார்னர் பகுதியில் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மாநகர பேருந்தில் பயணித்தோர் உட்பட அனைவருக்கும் முக கவசம் வழங்கி அமைச்சர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் 8,970 சிகிச்சை பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை
பெற்று வருகின்றனர் . இதில் 95% பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். 5% பேர் மருத்துவமனையில் உள்ளனர் . முக கவசம் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த இன்று ஐம்பதாயிரம் முக கவசம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது. இதில், தன்னார்வலர்கள் 150 பேரும் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து 4 மணிநேரம் முக கவசம் வழங்கி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
வரும் 10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது. ஒரே நாளில் ஒரு லட்சம் இடங்களில் முகாம் நடத்தப்படும். “காசநோய் இல்லா தமிழகம்” என்ற நிலையை எட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நாளை மறுநாள் 23 நடமாடும் “எக்ஸ்ரே” வாகன சேவையை நொச்சிக்குப்பம் பகுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் காசநோய் கண்டறியும் பணியில் இந்த நடமாடும் வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டு பல மாவட்டத்தில் ஆய்வு செய்ய இருக்கிறோம். கல்வி
நிலையத்தில் கூட தொற்று குறித்து கூடுதல் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல்களை வழங்கி இருக்கிறோம்.
தமிழ்நாடு முழுவதும் ஏழு தனியார் நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை அகற்றி வருகின்றனர். விரைவில் முறையாக அந்த நிறுவனங்கள் மருத்துவ கழிவுகளை கையாள்வதை ஆய்வு செய்ய இருக்கிறோம்.
திமுக பொதுக்குழு நடத்தினால் தடை எதுவும் இல்லை. ஆனால் முறையாக கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தனி மனித இடைவெளி, கிருமி நாசினி கொடுப்பது
போன்றவை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் கட்சி தொண்டர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த டிசம்பர் மாதமே மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு நுரையீரலில் தொற்று
ஏற்பட்டுள்ளது. இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு 95 நாட்கள் எக்மோ
சிகிச்சையில் இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அவருக்கு கொரோனா தொற்று
ஏற்பட்டது. நேற்றுதான் அவர் கொரோனவால் உயிரிழந்தார் என்ற தகவல் தவறு என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
-மணிகண்டன்








