ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தன்மண்டி பகுதியில் தையல்காரர் தலை துண்டித்து கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உதய்பூர் நகரில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், இந்தக் கொலை தொடர்பாக சட்டவிரோத நடவடிக்கைகள் (தண்டனை) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.
அத்துடன், இந்த வழக்கை தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக செய்தித்தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தெரிவித்திருந்தார். அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கையும் எடுத்துள்ளது. இந்த நிலையில், உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் (47) என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அவருக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற நிலையில், நேற்று அவரது கடைக்கு வந்த 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையாவின் கழுத்தை அறுத்து தலையை துண்டித்தனர். இதை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினர்.
ராஜ்மந்த் மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
பதற்றம் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையாக உதய்பூர் மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இணையதள சேவையும் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது.
முதலமைச்சர் அசோக் கெலாட், இந்த படுகொலைக்கு கடும் கண்டனம் பதிவு செய்தார்.
இந்தப் படுகொலை வன்முறையைப் பரப்பும் நோக்கில் அரங்கேற்றப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் அவர் வேதனை தெரிவித்தார். ஜெய்ப்பூர் நகரில் இன்று மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலமைச்சர் கெலாட் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “வன்முறையைப் பரப்பும் நோக்கத்தில் இந்தப் படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த இருவருக்கும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. தேசியப் புலனாய்வு அமைப்பு இதுதொடர்பாக விசாரிக்க உள்ளது. ராஜஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு அமைப்பு தேசியப் புலனாய்வு அமைப்புக்கு இந்த வழக்கில் ஒத்துழைப்பு அளிக்கும்” என்றார்.
சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும் மாநில காவல் துறையினருக்கு முதலமைச்சர் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
-மணிகண்டன்