கோவை நீதிமன்றத்தில் மனைவி மீது ஆசிட் ஊற்றிய கணவர்!

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்த இளம் பெண் மீது அவரது கணவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியில் சேர்ந்தவர் கவிதா.…

கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகத்தில் விசாரணைக்காக வந்த இளம் பெண் மீது அவரது கணவர் ஆசிட் ஊற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ராமநாதபுரம் காவிரி நகர் பகுதியில் சேர்ந்தவர் கவிதா. 35 வயதான இவர் சிவக்குமார் என்பவரை திருமணம் செய்துள்ளார். கணவன் மனைவியிடையே அடிக்கடி ஏற்பட்டு வந்த கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கவிதா கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த தெய்வச்சந்தரிகா என்ற பெண்ணிடமிருந்து 10 சவரன் நகையை பறித்த வழக்கில் கவிதா கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கின் விசாரணை கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், இன்று வழக்கு விசாரணைக்காக வந்த கவிதா குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உள்ள காத்திருப்பு பகுதியில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த கவிதாவின் கணவர் சிவக்குமார் தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டிலில் மறைத்து எடுத்து வந்த ஆசிட்டை அவர் மீது ஊற்றினார். இதில் ஆசிட் முகத்தில் பட்டதில் எரிச்சல் தாங்க முடியாமல், கவிதா கூச்சலிட அருகில் இருந்த வழக்கறிஞர்கள் சிவகுமாரை பிடிக்க முற்பட்டனர்.

அப்போது வழக்கறிஞர்கள் மீதும் ஊற்றிவிடுவேன் என அச்சுறுத்திய சிவக்குமார் அங்கிருந்து தப்பினார். அப்போது மற்றொரு வழக்குக்காக வந்த ஆனைமலை காவல் நிலையத்தை சேர்ந்த இந்துமதி என்ற தலைமை காவலர் சிவக்குமாரை துரத்திச் சென்று பிடித்தார். நீதிமன்ற வளாகத்துக்குள் ஆசிட் வீசிய சம்பவத்தால் பரபரப்பான சூழல் நிலவியதோடு அப்பகுதியில் திரண்ட வழக்கறிஞர்கள் சிவக்குமாரை தாக்க முற்பட்டனர். மேலும் அவரை போலீசார் கைது செய்து அழைத்துச் செல்லும்போது வழக்கறிஞர்கள் தாக்க முற்பட்டதால் போலீசாருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனையடுத்து வழக்கறிஞர்களிடமிருந்து சிவக்குமாரை மீட்ட போலீசார் பந்தய சாலை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் கவிதா மற்றும் வேறு வழக்கு விசாரணைக்காக வந்திருந்த இரு இளைஞர்கள் மீது ஆசிட் விழுந்ததில் அவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனை அடுத்து படுகாயம் அடைந்த மூவரும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் சம்பவ இடத்தில் தடுக்க முற்பட்ட வழக்கறிஞர்களின் அங்கி மற்றும் உடைகளில் ஆசிட் பட்டதால் உடைகள் சேதமடைந்தன. சம்பவ குறித்து பேசிய மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ், வழக்கு விசாரணைக்காக வந்த பெண்ணின் மீது அவரது ஆசிட் ஊற்றியதற்காக, கணவர் சிவக்குமார் மீது இந்திய தண்டனைச் சட்டம் 326A கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் போலீசாரின் பாதுகாப்பை மீறி தண்ணீர் பாட்டிலில் ஆசிட் கொண்டு வந்த கணவர் தனது மனைவி மீது ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் நீதிமன்ற வளாகம் முன்பு வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.