வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற ‘மல்லிப்பூ’ பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை படக்குழு மகிழ்ச்சியுடன் இன்று அறிவித்துள்ளது.
சிம்பு நடிப்பில் கடந்த ஆண்டு வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘வெந்து தணிந்தது காடு’. ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த இப்படத்தில் சித்தி இத்தானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
விமர்சனரீதியாகவும், வசூல்ரீதியாகவும் மக்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததோடு, ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியிருந்த அனைத்து பாடல்களும் திரும்ப திரும்ப கேட்டு ரசிக்கும் படியாகவும் அமைந்திருந்தது. அதில் குறிப்பாக பாடலாசிரியர் தாமரை எழுதிய ‘மல்லிப்பூ’ பாடல் பட்டிதொட்டி எல்லாம் ஒரு கலக்கு கலக்கியதோடு இன்றும் பலரும் விரும்பி கேட்கும் பாடலாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது இந்த மல்லிப்பூ பாடல் யூ டியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளதோடு, சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் பதிவிட்டும் வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா








