விருதுநகர் மாவட்டத்தில் பெய்த கனமழை மற்றும் சூறைக்காற்றால் சேதமடைந்த 40 லட்சம் மதிப்பிலான வெற்றிலை கொடிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசிற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஆவுடையாபுரம் பகுதியில் பலநூறு ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.சுமார் 300 குடும்பங்களின் வாழ்வாதாரம் வெற்றிலை விவசாயத்தை நம்பியே உள்ளது.
மாவட்டத்தில் வெற்றிலை சாகுபடி செய்யப்படும் ஒரே இடம் இதுவாகும்.இங்கு விளைவிக்கப்படும் வெற்றிலைக்கென தனி மதிப்பு தமிழகமெங்கும் உள்ளது. இங்கிருந்துதான் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு வெற்றிலை விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.ஒரு காலத்தில் இப்பகுதியில் புகழ்பெற்று விளங்கிய வெற்றிலை விவசாயம் தற்போது சுருங்கி பெயரளவில் மட்டுமே நடைபெற்று வருகிறது.
300 குடும்பங்களை சேர்ந்தவர்கள் 5 ஏக்கர் பரப்பளவில் கூட்டுப்பண்ணை முறையில் வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு
முன் பெய்த கனமழை மற்றும் சூறாவளி காற்றின் காரணமாக பயிரிடப்பட்டிருந்த வெற்றிலை மரங்கள் சேதமடைந்துள்ளன.
இவற்றின் மொத்த மதிப்பு 40 லட்சத்திற்கும் மேலாகும்.கூட்டுப்பண்ணை முறையில் பயிரிடப்பட்டிருந்ததால் பயீர் காப்பீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் 300குடும்பங்கள் வாழ்வாதரத்தை இழந்து நிற்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகமும்,அரசும் இதில் உடனடியாக தலையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
-வேந்தன்







