குடும்ப அட்டை நகல் பெற ஆன்லைனில் விண்ணப்பித்து ரூ.20 மட்டும் கட்டணம் செலுத்தி புதிய நகல் மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
புதிய குடும்ப அட்டை, அட்டையில் பெயர் திருத்தம்-நீக்கம், முகவரி மாற்றம் செய்தவர்கள் புதிய குடும்ப அட்டை பெற முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும் வசதி உள்ளது. அதன்படி, குடும்ப நகல் அட்டை பெற விரும்புபவர்கள் நேரடியாக http://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்யலாம். அதில் கிடைக்கும் ஒப்புகை சீட்டினை சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தில் கொடுத்து ரூ.20 கட்டணம் செலுத்தி புதிய நகல் மின்னணு குடும்ப அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசின் http://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை நகல் உள்பட புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிப்பது, புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது-நீக்குவது, ஆதார் எண் இணைப்பது, முகவரி மாற்றம், குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் என அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். கட்டணம் எதுவும் கிடையாது. அதே போல் விண்ணப்பம் செய்த பின், தங்களது விண்ணப்பத்தின் நிலையைத் தொடர்ந்து கண்காணிக்கலாம். பொதுமக்களே ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் வகையில் இந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
அண்மைச் செய்தி: ‘YouTube-ல் இனி சப்ஸ்கிரைபர் எண்ணிக்கையை மறைக்க முடியாது!’
நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிப்பது எப்படி:
1. www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
2. அதில், நகல் மின்னணு குடும்ப அட்டை விண்ணப்பிக்க என்பதனை தேர்வு செய்ய வேண்டும்.
3. குடும்ப அட்டையுடன் பதிவு செய்யப்பட்டுள்ள கைப்பேசி எண்ணைக் கொடுத்து ஓடிபி எண்ணைப் போட வேண்டும்.
4. என்ன காரணத்திற்காக புதிய நகல் மின்னணு குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கிறீர்கள் என்பதனை கொடுக்க வேண்டும்.
5. அதன் பின் தங்களுக்கு ஒரு எண் கொடுக்கப்படும். அதனை வைத்து விண்ணப்பத்தின் நிலையைத் தெரிந்துகொள்ள முடியும்.








