அதிமுகவிற்கு கண்டிப்பாக ஒற்றை தலைமை தேவை என சசிகலா கூறியுள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒற்றை தலைமையாக தான் இருப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் 26 ஆம் தேதி தொண்டர்களையும் பொதுமக்களையும் சந்திக்க திருத்தணி சென்ற சசிகலா மீண்டும் தனது அரசியல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். சென்னை குமணன் சாவடியில் இருந்து தனது சுற்று பயணத்தை தொடங்கிய சசிகலா, அங்கு திரண்டிருந்த தொண்டர்களிடையேயும், பொதுமக்களிடையேயும் உரையாற்றினார். பல்வேறு சோதனைகள் ஏற்பட்டபோதெல்லாம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு தாம் உற்ற துணையாக இருந்ததாக சசிகலா குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது, ஜெயலலிதாவை அழைத்து தமக்கு பின்னர் அதிமுக தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என சத்தியம் பெற்றதை அருகிலிருந்து பார்த்தாகக் கூறிய சசிகலா, ஜெயலலிதாவிற்கு உற்றதுணையாக இருக்க வேண்டும் என தம்மை எம்.ஜி.ஆர் கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதிமுகவை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே திமுக முயற்சி செய்து வருவதாகக் குற்றம்சாட்டிய சசிகலா, தற்போது நடக்கும் நிகழ்வுகள் திமுகவினரின் எண்ணங்கள், திட்டங்கள் நிறைவேறிக்கொண்டிருப்பதையே காட்டுவதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். திமுகவினரின் எண்ணங்கள் ஈடேற இடம் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் தாம் பொறுமையோடு செல்வதாகவும் சசிகலா குறிப்பிட்டார். எதையும் எதிர்ப்பார்க்காமல் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்கள் உள்ளவரை அதிமுகவை அழிக்க முடியாது என சசிகலா கூறினார்.
தனிப்பட்ட சிலரின் சுயநலத்தால், உள்ளாட்சி இடைத் தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுகவினர் போட்டியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக சசிகலா குற்றம்சாட்டினார். அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக தேவை எனக் கூறிய அவர், ஆனால் அந்த தலைமை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அனைத்து தொண்டர்களையும் அரவணைத்து செல்கிற தலைமையாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். ஜாதி-மதம் பாகுபாடு பார்க்காத, ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்க்காத, அனைத்து தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவர் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என்பதற்காகவே யாராலும் மாற்ற முடியாத கட்சி சட்டவிதிகளை அதிமுகவை தொங்கியபோது எம்.ஜி,ஆர் ஏற்படுத்தியதாக சசிகா குறிப்பிட்டார். அத்தகைய ஒற்றை தலைமையாக தான் இருப்பேன் எனக் குறிப்பிட்ட சசிகலா, தனது தலைமையில் அதிமுக வலிமை பெறும் எனக் கூறினார்.