பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டை விட 2 கோடியே 23 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோரின் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி, பிரதமர் நரேந்திர மோடியின் சொத்து குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அதன்படி, பிரதமர் மோடியின் அசையும் சொத்துக்களின் மதிப்பு, கடந்த ஆண்டை விட 26 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு கோடியே 97 லட்சத்து 68 ஆயிரத்து 885 ஆக இருந்த அவரது சொத்து மதிப்பு தற்போது 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் பிரதமர் மோடியிடம் ரொக்கமாக 35 ஆயிரத்து 250 ரூபாய் மட்டுமே இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பிரதமர் மோடியிடம் அசையா சொத்துக்கள் ஏதும் இல்லை என்றும், குஜராத்தின் காந்தி நகரில் இருந்த சொத்துக்களில் தனது பங்கை தானமாக வழங்கிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடிக்கு நான்கு தங்க மோதிரங்கள் உள்ளதாகவும், அவருக்கு சொந்தமாக கார் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தபால் நிலையத்தில் 9 லட்சம் ரூபாய் மதிப்பில் தேசிய சேமிப்பு பத்திரங்களும், 1 லட்சத்து 89 ஆயிரத்து 305 ரூபாய் மதிப்பில் காப்பீடும் பிரதமர் மோடி பெயரில் உள்ளதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சொத்து மதிப்பு கணக்கில் காட்டப்பட்டுள்ளது.
-இரா.நம்பிராஜன்