வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடியை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக களம் இறங்க ராகுல்காந்திக்கு அனைத்து தகுதிகளும் இருப்பதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் முதலமைச்சருமான அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அசோக்கெலாட், ராகுல்காந்தி தனது இந்திய ஒற்றுமை நடை பயணத்தின்போது, பொதுமக்கள் சந்திக்கும் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக குறிப்பிட்டார். ராகுல்காந்தி சொல்லும் செய்தி ஒவ்வொரு வீட்டையும் சென்றடைவதாகவும் அசோக் கெலாட் தெரிவித்தார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரதமர் வேட்பாளராக களம் இறங்கி அவருக்கு சவாலாக இருப்பதற்கான அனைத்து தகுதிகளையும் ராகுல்காந்தி பெற்றிருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்தார். எனினும் எதிர்க்கட்சிகளின் அந்த பொது வேட்பாளர் யார் என்பதை அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுகூடிதான் முடிவு செய்வார்கள் என்றும் அசோக் கெலாட் கூறினார்.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள இமாச்சல் பிரதேசத்திலும், குஜராத்திலும் அரசுக்கு எதிரான அதிருப்தி நிலவுவதாக கூறிய அசோக் கெலாட், இரண்டு மாநிலங்களிலும் வெற்றியை நோக்கி காங்கிரஸ் வேகமாக முன்னேறி வருவதாகக் கூறினார். வரும் நவம்பர் 12ந்தேதி தேர்தல் நடைபெறும் இமாச்சல் பிரதேசத்தில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றும் அசோக் கெலாட் நம்பிக்கை தெரிவித்தார். ஆம் ஆத்மி மக்களை தவறாக வழிநடத்துவதாக அவர் விமர்சித்தார்.







