2021-22 நிதி ஆண்டின் மொத்த நாட்களில் 78 நாட்கள் பெட்ரோல் விலையும், 76 நாட்கள் டீசல் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதே வேளையில் 7 நாட்கள் பெட்ரோல் விலையும், 10 நாட்கள் டீசல் விலையும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
2021-2022 நிதி ஆண்டில் இந்தியாவில் எத்தனை நாட்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது? அதேபோல் விலை குறைப்பு எத்தனை நாட்கள் செய்யப்பட்டுள்ளது? எவ்வித மாற்றமும் இல்லாமல் எத்தனை நாட்கள் பெட்ரோல்-டீசல் விலை இருந்தது ? என மாநிலங்களவையில் உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெலி கூறுகையில், “2021-2022 நிதியாண்டில் கணக்கிடப்பட்ட மொத்தம் 365 நாட்களில் 78 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதுபோல் 76 முறை டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதேவேளையில், பெட்ரோல் விலை 7 நாட்களும், டீசல் விலை 10 நாட்களும் குறைக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இதேபோல் பெட்ரோல் விலை 280 நாட்களும், டீசல் விலை 279 நாட்களும் விலை மாற்றமின்றி விற்கப்பட்டதாகவும் மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.








