இந்துக்கள் எப்படி ‘காஃபிர்’ (நம்பிக்கை இல்லாதவர்கள்) ஆக முடியும்? என இஸ்லாமிய அமைப்புகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் டெல்லியில் இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களை சந்தித்தார். முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட நுபுர் சர்மா விவகாரத்தை தொடர்ந்து இந்த கூட்டம் நடத்த வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் ஆர்எஸ்எஸிடம் கேட்டு கொண்டதன் அடிப்படையில் இந்த கூட்டம் நடைபெற்றது. சுமார் 75 நிமிடங்கள் இந்த கூட்டம் நடைபெற்றது.
இதில், டெல்லியின் முன்னாள் துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் குரோஷி, அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் லெப்டினன்ட் ஜெனரல் ஜமீர் உதின் ஷா (ஓய்வு), ராஷ்டிரிய லோக்தளம் தேசிய துணைத் தலைவர் ஷாகித் சித்திக் மற்றும் தொழிலதிபர் சயீத் ஷெர்வானி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பசுவதை மற்றும் இந்துக்களை கபிர் என்று சொல்வது குறித்து அவர்களிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு இஸ்லாமிய அமைப்புகள், தாங்கள் அதற்கு எதிரானவர்கள் என்று வலியுறுத்தினார்கள். அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்தின் நிறுவனர் சர் சையத் அகமது கான், அனைத்து சமூகத்தினரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்கும் வகையில் வளாகத்தில் மாட்டிறைச்சியைத் தடை செய்ததாக கூறினார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் இந்துக்கள் மீது ‘காஃபிர்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினார். “இந்துக்கள் எப்படி ‘காஃபிர்’ (நம்பிக்கை இல்லாதவர்கள்) ஆக முடியும்? அவர்களுக்கும் கடவுள் நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார். மேலும், இந்துக்களை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு பதிலளித்த இஸ்லாமிய அமைப்புகள், தாங்கள் இந்த வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றும், நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்தில் “சமூக விரோத சக்திகளால்” தவறாகப் புரிந்து கொள்ளப்படுவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும் இஸ்லாமியர்களை சமூக விரோதிகள் என்று கூறுவது வலியை ஏற்படுத்துவதாக வருத்தம் தெரிவித்தனர்.







