100 அடி உயரத்தில் இருந்து விழுந்தது ஏர் பலூன்: 5 பேர் பரிதாப பலி

நியூ மெக்சிகோவில், ஏர் பலூன் நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ளது ஆல்புகெர்க்கி நகரம். மிகவும் உயரத்தில் இருக்கும் இந்த நகரம் வண்ண…

நியூ மெக்சிகோவில், ஏர் பலூன் நூறடி உயரத்தில் இருந்து கீழே விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் உள்ளது ஆல்புகெர்க்கி நகரம். மிகவும் உயரத்தில் இருக்கும் இந்த நகரம் வண்ண ஹாட் பலூன்களுக்கு பிரசித்தி பெற்றது. இந்த சுற்றுலா நகருக்கு இதற்காகவே ஏராளமானோர் வருவது உண்டு.

இந்நிலையில், சனிக்கிழமையன்றும் ஏராளமானோர் வண்ணப் பலூன்களில் பறந்து கொண்டிருந்தனர். ஒரு பலூனில் ஒரு விமானி, 2 பெண்கள் உட்பட 5 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் 40 -ல் இருந்து 60 வயதை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களின் பலூன் உயரமாக சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்தப் பலூன், மின் கம்பிகளில் மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் பலூனில் தீப்பிடித்தது. இதையடுத்து கூடை தனியாவும் பலூன் தனியாகவும் பிரிந்து கீழே விழுந்தது.

ஆல்புகெர்க்கி அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் இந்த பலூன் விழுந்ததில், அதில் இருந்த 4 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். இறந்தவர்கள் குறித்த அடையாளங்களை போலீசார் வெளியிடவில்லை. இந்த விபத்து காரணமாக, அந்தப் பகுதியில் உள்ள 13 ஆயிரம் வீடுகள், வணிக நிறுவனங்களில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.