கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நடைபெற்ற கலவரம் அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது என அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தை முன்னிட்டு கிருஷ்ணகிரி அதிமுக சார்பில், ராசு வீதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு அதிமுக துணை பொது செயலாளர் கே பி முனுசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் மாடு விடும் நிகழ்ச்சி என்பது பாரம்பரியமாக இங்கு உள்ள இளைஞர்களால் திருவிழாவாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு இந்த நிகழ்ச்சியை முறைப்படுத்தி, அந்தந்த கால கட்டங்களில் அனுமதி கேட்கும் பொழுது முறையாக மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும்.
ஆனால் ஓசூர் கோபசந்திரம் பகுதியில் நேற்றைய நிகழ்ச்சிக்கு அரசு முறையான அனுமதி அளிப்பதில் செய்த குளறுபடியாலையே இளைஞர்கள் உணர்ச்சிவசப்பட்டு அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இது இந்த அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழக முழுவதும் வீர விளையாட்டுகளுக்கு அந்தந்த காலகட்டங்களில் உரிய அனுமதி வழங்கி இளைஞர்களின் உணர்வுக்கு தமிழக அரசு மதிப்பளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கும் வீடியோ குறித்த கேள்விக்கு பதில் அளித்த கேபி முனுசாமி அந்த நிகழ்வு குறித்து தான் அறியவில்லை எனவும், அவ்வாறு இளைஞரை உயர் அதிகாரி தாக்கும் நிகழ்வு நடைபெற்றிருந்தால், அது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், இந்த நிகழ்வை காரணம் காட்டி யாரும் மாவட்டத்தின் அமைதியை சீர்குலைக்க கூடாது எனவும் கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடை தேர்தல் வெற்றி குறித்து பேசிய கே.பி முனுசாமி அதிமுகவுக்கு தான் வெற்றி முகம் என கூறினார்.
- பி.ஜேம்ஸ் லிசா