திருப்பதி கோயில் அன்னதானத்திற்கு 25 டன் காய்கறிகளை அனுப்பி வைத்த ஓசூர் விவசாயிகள்..!

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பதி கோயில் அன்னதான மையத்திற்கு அனுப்பி வைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, பாகலூர்,…

ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனைச் சந்தையில் இருந்து விவசாயிகள் காய்கறிகளை திருப்பதி கோயில் அன்னதான மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு உட்பட்ட ஆவலப்பள்ளி, பாகலூர், பெலத்தூர், பூனப்பள்ளி, மத்தம் அக்ரஹாரம், தேன்கனிக்கோட்டை, தளி, கெலமங்கலம், சூளகிரி ஆகிய இடங்களில் காய்கறி விளைச்சல் செய்யப்படுகிறது. இந்த பகுதி விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்தியும், சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகவும் கேரட், பீன்ஸ், பீட்ரூட், முள்ளங்கி, காலிஃபிளவர், முட்டைக்கோஸ், குடைமிளகாய், பச்சை மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இங்குள்ள இதமான தட்பவெப்பம் மற்றும் பதமான மண் வளம் காரணமாக இப்பகுதியில் விளையும் தரமான மற்றும் சுவை மிகுந்த காய்கறிகளுக்குத் தமிழகத்தில் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தொடர்ந்து காய்கறி உற்பத்தியில் ஈடுபட்டு கணிசமான அளவில் லாபம் ஈட்டி வருகின்றனர். இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் முதலில் ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி மொத்த விற்பனை சந்தைக்குக் கொண்டு வரப்பட்டு, பிறகு அங்கிருந்து சென்னை, கோவை, மதுரை, சேலம் உட்பட தமிழகம் முழுவதும் மற்றும் கேரளா, கர்நாடகா ஆகிய வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஓசூர் பகுதி விவசாயிகள் மற்றும் காய்கறி சந்தை உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, அப்பகுதியில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு திருப்பதி கோயிலுக்கு தாங்கள் விளைவித்த காய்கறிகளை சாகுபடி செய்து, அதனை ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலை கோயிலில் உள்ள அன்னதான பிரசாதம் மையத்திற்கு, ஆண்டிற்கு 3 முறை 20 முதல் 30 டன் வரை காய்கறிகளை இலவசமாக அனுப்பி வைத்து வருகின்றனர்.

அதன்படி இந்த ஆண்டிற்கான காய்கறிகளை திருப்பதி கோயில் அன்னதான பிரசாத மையத்திற்கு அனுப்பி வைப்பதாக காய்கறி சந்தை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் கோயில் நிர்வாகத்தினரிடம் கூறியிருந்த நிலையில், திருப்பதி கோயில் நிர்வாகம் சார்பில் அவர்களுக்கு சொந்தமான இரண்டு லாரிகள் நேற்று மதியம் பத்தலப்பள்ளி காய்கறி மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் அந்த லாரியில் 25 டன் காய்கறி மூட்டைகளை விவசாயிகள் ஏற்றிய மார்க்கெட் உரிமையாளர்கள், விவசாயிகள், அந்த லாரிக்கு பூஜை செய்து வணங்கி கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டு வழி அனுப்பி வைத்தனர்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.