ஜி20 மாநாட்டில் உக்ரைன் பங்கேற்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா கோரிக்கை வைத்துள்ளார்.
உக்ரைன் நாட்டின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் எமின் தபரோவா நான்கு நாள் பயணமாக இந்தியா வருகை தந்துள்ளார். உக்ரைன்-ரஷ்யா போருக்கு பிறகு இந்தியா வரும் முதல் உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா ஆவார். உக்ரைன்-ரஷ்யா போரில் அமைதி பேச்சு வார்த்தைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் உக்ரைனில் அமைதி நிலவ இந்தியா உதவ தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
பிரதமர் மோடியின் பேச்சு சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், எமின் தபரோவாவின் இந்தியப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. இதனிடையே டெல்லி வந்துள்ள எமின் தபரோவா, அங்குள்ள வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் சென்றார்.
இந்திய வெளியுறவுத்துறை செயலாளரான சஞ்சய் வெர்மாவை உக்ரைன் அமைச்சர் எமின் தபரோவா சந்தித்து இருதரப்பு உறவு, உக்ரைனில் தற்போதுள்ள சூழல், உக்ரைன் மீதான போர் ஏற்படுத்தி இருக்கும் சர்வதேச தாக்கம் ஆகியவை குறித்து விவாதித்தார். மேலும் வெளியுறவுத் துறை இணை அமைச்சர் மீனாட்சி லேகி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரையும் எமின் தபரோவா சந்தித்துப் பேசினார்.
மேலும் ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலால் உக்ரைன் எந்த அளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஊடகங்கள் மற்றும் இந்திய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்து இந்தியாவில் உக்ரைனுக்கான ஆதரவை அவர் திரட்டியதாக தகவல் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் இந்த முறை இந்தியா தலைமையேற்றுள்ளது. இந்த மாநாட்டில் உக்ரைன் பங்கேற்க இந்தியா வலியுறுத்த வேண்டும் என வெளியுறவு துறை துணை அமைச்சர் எமின் தபரோவா கேட்டுக்கொண்டுள்ளார். செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜி-20 நிகழ்வுகள் மற்றும் உச்சிமாநாட்டிற்கு உக்ரேனிய அதிகாரிகளை இந்தியா அழைக்க வேண்டும். இதன் உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை வெளிச்சம் போட்டுக் காட்ட முடியும் என்றும், தங்களது அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி ஜீ20 மாநாட்டில் உரையாற்றுவதில் மகிழ்ச்சி அடைவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“எங்கள் எதிர்பார்ப்புகள் மிகவும் தெளிவானவை. உக்ரைனுக்கு எதிரான ரஷ்யா நடத்திய போரின் விளைவுகள் பற்றிய விவாதம் இல்லாமல் பொருளாதாரம் மற்றும் எதிர்கால வளர்ச்சி, உலகின் பொருளாதார நிலைமை பற்றிய விவாதங்கள் சாத்தியமில்லை என அமைச்சர் எமின் தபரோவா கூறினார்.







