ஓசூர் – பெங்களூருவை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணனால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை பதிலளித்துள்ளது. அதில், சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு தலைமைச்செயலாளர் இறையன்பு தலைமையிலான குழு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களை விரைவுபடுத்துவதற்காக, அனைத்து துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் உயர் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், திட்டம் தொடர்பான முதல் விரிவான திட்ட அறிக்கை 26.11.2021 அன்று பெறப்பட்டது, புதுப்பிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை 22.09.2022 அன்று பெறப்பட்டது, மதிப்பீட்டின்படி திட்ட செலவு ரூ. 4,625 கோடி என கூறப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் இடையே 15.46 கிமீ தொலைவில், 12 உயர்மட்ட இரயில் நிலையங்கள் வரவுள்ளது. அந்த வழித்தடத்தில் 2026 இல் – 1.50 லட்சம், 2038 – 2.99 லட்சம், 2048 – 4.36 லட்சம், 2053 –5.15 லட்சம் பயணிகள் பயணிக்க வாய்ப்பு என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் ஓசூரிலிருந்து பெங்களூரு செல்லும் வகையிலான மெட்ரோ ரயில் திட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளதாகவும் சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.