தமிழ்நாடு, கேரளம், அசாம் ஆகிய மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மேற்கு வங்காளத்தில் மட்டும் 2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, ஏப்ரல் 23ம் தேதி 152 தொகுதிகளுக்கான முதல் கட்ட தேர்தல் நடத்தப்பட்டது. இதில் 93.2 சதவீத வாக்குகள் பதிவாகின.
இந்த நிலையில் மீதமுள்ள 142 தொகுதிகளுக்கு நேற்று 2-வது கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 3.22 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களில், 3.21 கோடி பேர் பொது வாக்காளர்கள் ஆவர். சுமார் 40,000 பேர் ராணுவ மற்றும் துணைப்படைச் சேவை வாக்காளர்கள் ஆவர். வாக்காளர்களில் 1.64 கோடி பேர் ஆண்கள், 1.57 கோடி பேர் பெண்கள்; 792 பேர் மூன்றாம் பாலினத்தவர் ஆவர்.
4.12 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் 18 முதல் 19 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணியளவில் தொடங்கியது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 91.66% வாக்குகள் பதிவாகியுள்ளது. மேற்குவங்கம் உட்பட 5 மாநிலங்களுக்கு மே.4ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.







