இல்லம் தேடி கல்வி திட்டம் தேவைப்பட்டால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நீட்டிக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
பள்ளிக் கல்வித்துறை சார்பில் மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ், வட்டார கல்வி அலுவலர்கள் தங்களுடைய தொகுதிக்கு உட்பட்ட எம்.பிக்கள், எம்எல்ஏக்களிடம் பேசி தங்கள் பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு மேம்பாட்டு வளர்ச்சிக்கு நிதியை கேட்டுப் பெற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், சென்னையில் நடந்தது போன்று தென்தமிழகத்திலும் விபத்து நடைபெற்று விடக்கூடாது என்பதற்காக ஆலோசனைகள் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார். தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ள ஒரு லட்சத்து 78 ஆயிரம் இல்லம் தேடி கல்வி முறை மையத்தில் 35 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றனர் என்றும் அன்பில் மகேஸ் குறிப்பிட்டார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா மூன்றாம் அலை காரணமாக இல்லம் தேடி கல்வி திட்டம் கடந்த ஆண்டு தாமதமாக தொடங்கப்பட்டதாக கூறினார். இந்த திட்டம் நடப்பு கல்வி ஆண்டில் முழுமையாக நடைபெறும் என்றும், தேவைப்பட்டால் எத்தனை காலம் வேண்டுமானலும் தொடரும் என்றும் தெரிவித்தார். வேலைவாய்ப்பு குறித்தும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








