பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்தது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா, நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர்…

டெல்லியில் பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகமான அண்ணா-கலைஞர் அறிவாலய திறப்பு விழா, நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, டெல்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்தார். சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த சந்திப்பில், நீட் விவகாரம், மேகதாது அணை விவகாரம், இலங்கை தமிழர்களுக்கு உதவ அனுமதி மற்றும் தமிழ்நாட்டிற்கு தேவையான நிதி, ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.

டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பிரதமர் உடனான சந்திப்பு மன நிறைவாக இருந்ததாகவும், தனது கோரிக்கைகளில் உள்ள முக்கியத்துவத்தை பிரதமரிடம் எடுத்துக் கூறியதாகவும் தெரிவித்தார். கர்நாடக அரசு காவிரியில் மேகதாது அணை கட்ட மத்திய அரசு அனுமதி கொடுக்கக்கூடாது எனவும், நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் கூறினார்.

கச்சத்தீவை மீட்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கோரிக்கைகளை கவனமுடன் கேட்டுக்கொண்ட பிரதமர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் தெரிவித்தார். இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதி தொடர்பாக கோரிக்கை வைத்ததாக தெரிவித்த முதலமைச்சர், மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்தபோது, அவர் தன்னிடம் தமிழ்நாட்டில் அதிகளவு நெடுஞ்சாலை திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தெரிவித்ததாக கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.