முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

விவாதப் பொருளான “ஒன்றியம்”: வரலாறும், சட்டமும் ஓர் பார்வை


த.எழிலரசன்

கட்டுரையாளர்

மே 2-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அப்போது, வெற்றி பெற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்தார். இதற்கு “கூட்டாட்சி தத்துவத்தை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு, ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்படும்” என ஸ்டாலின் பதிலளித்தார். அந்த கணம் தொடங்கி, ஒன்றிய அரசு என்ற சொல் குறித்த விவாதம்தான் தற்போது சட்டப்பேரவை விவாதம் வரை நீண்டிருக்கிறது.

மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவராக உள்ள ஜெயரஞ்சன் உள்ளிட்ட ஒரு சிலரே பயன்படுத்தி வந்த ஒன்றிய அரசு என்ற வார்த்தை, முதலமைச்சர் ஸ்டாலின் பயன்படுத்திய பின்னர், மூலை முடுக்கெல்லாம் இப்போது சென்று சேர்ந்திருக்கிறது.

இப்போது மட்டுமல்ல, 1957-ஆம் ஆண்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ஒன்றியம் என்னும் சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. “இந்திய யூனியனில் மாநிலங்கள், மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் பிரிக்கப்படாமல், பெரும்பாலும் மொழி, கலாச்சார அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டுள்ளன” என்பதே, ஒன்றியம் என்பதற்காக விளக்கம்.

திமுக தேர்தல் அறிக்கையில் ஒன்றிய அரசு என்ற சொல் இடம்பெற காரணம், திமுக நிறுவனரான பேரறிஞர் அண்ணா, இந்தியா என்பது பல தேசிய இனங்களின் ஒன்றியம் என்ற கோட்பாட்டில் உறுதியாக இருந்ததே ஆகும். 1963 ஜனவரி மாதம் 25ஆம் தேதி மாநிலங்களவையில் உரையாற்றிய அறிஞர் அண்ணா, சட்டம் சார்ந்த இறையாண்மை, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களான மாநிலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

இதேபோல, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும் பல இடங்களில், ஒன்றிய அரசு என்ற பதத்தையே பயன்படுத்தியுள்ளார். மாநில சுயாட்சி குறித்து பேசும் போது, சமூக, பொருளாதார தளங்களில் அதிகாரப் பரவல் மூலம் உருவாகும் மாநில அரசுகளே, ஒன்றிய அரசுக்கு வலு சேர்க்கும் என்றார்.

அண்ணா பேசி 50 ஆண்டுகளைக் கடந்து நிலையில் 2019ஆம் ஆண்டு அதே மாநிலங்களவையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளார் வைகோ, அமெரிக்க ஐக்கிய நாடுகளைப் போல ‘இந்திய ஐக்கிய நாடுகள்’ என்றே இந்தியா அழைக்கப்பட வேண்டும்” என்ற வாதத்தை முன்வைத்தார்.

ஒன்றிய அரசு: சட்டம் சொல்வது என்ன?

ஒன்றிய அரசு என்ற வார்த்தை குறித்து சட்டம் என்ன சொல்கிறது என்பது, அனைவருக்கும் எழும் பொதுவான கேள்வியாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முதல் பக்கத்தில், “இந்தியா எனும் பாரதம், மாநிலங்களைக் கொண்டதோர் ஒன்றியமாக இருக்கும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 352 வது பிரிவில் அமைச்சரவையும் Union Council of Ministers, அதாவது, “ஒன்றிய அமைச்சரவை என்றே குறிப்பிடப்படுகிறது. 279 ஏ பிரிவில் “ஒன்றிய நிதி அமைச்சர்” என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சட்டத்தின் 300வது பிரிவில் “இந்திய ஒன்றியத்தின் பெயரால், இந்திய அரசாங்கம் வழக்கு தொடுக்கலாம்” என்றே சொல்லப்பட்டுள்ளது. இதுமட்டுமல்ல, அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து இடங்களில் “ஒன்றியம்” என்ற சொல்லாடலே பயன்படுத்தப்படுகிறது. இது தவிர, 1945-ல் அம்பேத்கர் எழுதிய States and Minorities என்ற கட்டுரை முழுவதுமே ‘Unites States of India’ என்கிற பதத்தையே அவர் பயன்படுத்தியுள்ளார்.

மாநில சுயாட்சியின் மறு வடிவமாக ஒன்றிய அரசு என்ற வார்த்தை மாறிய நிலையில், அது தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் தற்போது எதிரொலித்துள்ளது. சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது பேசிய சட்டப்பேரவை பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அரசை, ஒன்றிய அரசு என முன்னிறுத்துவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலங்களை உள்ளடக்கிய ஒன்றியமாக இந்தியா இருப்பதால்தான் பயன்படுத்துகிறோம் எனவும், சட்டத்தில் இல்லாததை சொல்லவில்லை எனவும் விளக்கமளித்தார். 1957 ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் இந்திய யூனியன் என்றுதான் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். ஒன்றிய அரசு என சொல்வதை யாரும் சமூக குற்றம் போல பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய என்ற வார்த்தையை பார்த்து மிரள தேவையில்லை என்றும், அதில் கூட்டாட்சி தத்துவம் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஒன்றிய என்ற வார்த்தையை பயன்படுத்தினோம், பயன்படுத்துவோம், இனிமேலும் பயன்படுத்திக் கொண்டே இருப்போம் என தெளிவான விளக்கத்தை அளித்து, விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

Advertisement:
SHARE

Related posts

பிரேசில் தடுப்பூசி ஒப்பந்தத்தில் முறைகேடு இல்லை: பாரத் பயோடெக் மறுப்பு

Halley karthi

தமிழிசை, கமல்ஹாசன் பக்ரீத் வாழ்த்து

Gayathri Venkatesan

கந்து வட்டி கொடுமையால் விவசாயி தற்கொலை

Jeba Arul Robinson