தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற தந்தையை காவல்துறையினர் தாக்கியதால், காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகள் போராட்டத்தில் ஈடுபட்டார்.
செங்கோட்டை அருகே புளியரை பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் என்பவர் ரேஷன் கடையில் 10 கிலோ அரிசி வாங்கி சென்றுள்ளார். அப்போது அவர் ரேஷன் அரிசி கடத்துவதாகக் கூறி சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்ற புளியரை காவல் நிலைய போலீசார் அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த பிரான்சிஸ், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, தன்னுடைய தந்தையை தாக்கிய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகள் அபிதா 100 அடி உயரமுள்ள செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தினார்.

பின்னர் அபிதாவின் போராட்டம் குறித்து அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர் செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். ஆனாலும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காத நிலையில் மீண்டும் தனது சகோதரியுடன் சேர்ந்து செங்கோட்டை அரசு மருத்துவமனையிலுள்ள குடிநீர் தொட்டி மீது ஏறி போராட்டம் நடத்தினார். இதையடுத்து பிரான்சிஸை தாக்கிய உதவி ஆய்வாளர் முருகேசன், தனிப்பிரிவு காவலர் மஜித் ஆகியோர் மீது புளியரை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.







