முக்கியச் செய்திகள் கட்டுரைகள்

திருத்தி எழுதப்பட உள்ள வரலாறுகள்


மரிய ரீகன் சாமிக்கண்ணு

வரலாற்றை மாற்ற முடியும் என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சும், அதனை ஒட்டி வரலாற்றை மாற்றி அமைக்க முடியுமா என்ற பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் எதிர்வினையும் தான் இந்திய அரசியலில் புதிய விவாதத்திற்கு வித்திட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு மன்னர்கள் ஆட்சி செய்துள்ளார்கள். ஆனால், முகலாயர்கள் குறித்தே வரலாற்று ஆசிரியர்கள் அதிகம் பதிவு செய்து உள்ளார்கள் என அமித்ஷா கூறியுள்ளார். அமைச்சர் அமித்ஷாவின் பேச்சு பல வகையில் கேள்விகளுக்கு உட்படுத்துகிறது. வரலாற்றை பாஜக மாற்றும் எண்ணத்திற்கு ஏன் வந்துள்ளது? வரலாற்றை மாற்றுவதால் இந்திய மக்களுக்கு அவர்கள் என்ன சொல்ல போகிறார்கள்?

இந்தியாவை ஆண்ட மன்னர்கள் யார்?:

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஐரோப்பியர்கள் வருகைக்கு முன்புவரை இந்தியா என்பது ஒரு நாடாக இருந்தது இல்லை. அது சிறு சிறு சமஸ்தானங்களாகவும், தனித்தனி நாடுகளாகவும்  இருந்தன. பின்னர் வந்த  ஆங்கிலேயர்கள் கூட, சென்னை மாகாணம், மும்பை மாகாணம் என்று தான் பிரித்து ஆட்சி செய்தார்கள். அது அவர்களின் நிர்வாக நடைமுறைக்கும், சந்தை நாடாக்குவதற்கு உதவியாக இருந்தது. சுதந்திர இந்தியாவிற்கு பிறகு மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட பின்பு தான் தமிழ்நாடு என்பது கட்டமைக்கப்படுகிறது. இப்படி தான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களின் நிலை உள்ளது. பாண்டிய மன்னனோ, குப்தர் வம்சமோ, மவுரிய பேரரசோ ஒன்றுபட்ட இந்தியாவை ஆண்ட வரலாறு என்பது இல்லை. அசாமை ஆண்ட அகோம் அரசோ, மவுரியர்களோ, சாதவாகனர்களோ, குப்தர்களோ, பல்லவர்களோ, சோழர்களோ, பாண்டியர்களோ இந்து என்ற உணர்வு நிலையில் அவர்களுக்குள் உடன்பட்டு இருக்கவில்லை. அவர்களுக்குள்ளும் இன்னொரு நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவும், செல்வங்களை, பெண்களை கவர்ந்து வந்தார்கள். ஒவ்வொரு மன்னனும் இன்னொரு மன்னன் மீது பகை உணர்வோடு தான் இருந்தான்.

மாகாணங்களாக பிரித்து காட்டும் வரலாறு:

உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வார்த்தைகள் படி பார்த்தால், “800 ஆண்டுகள் பாண்டியர் மன்னர்கள் ஆட்சி செய்து இருக்கின்றனர். அசாமை சேர்ந்த அகோம் பேரரசு 650 ஆண்டுகள் ஆட்சி செய்து இருக்கிறார்கள். பல்லவ மன்னர்கள் ஆட்சி 600 ஆண்டுகள் நடைபெற்று உள்ளன. சோழர்கள் 600 ஆண்டுகள் இந்த நாட்டை ஆட்சி செய்து இருக்கின்றனர். மவுரிய பேரரசு ஆட்சி ஆப்கானிஸ்தான் தொடங்கி இலங்கை வரை 550 ஆண்டுகள் நடைபெற்று இருக்கின்றன. சாதவாகனர்களுடைய ஆட்சி 500 ஆண்டுகளும், குப்தர்களின் ஆட்சி 400 ஆண்டுகள் நடந்துள்ளன. ஒருங்கிணைந்த இந்தியாவை அமைக்க குப்தர் வம்சத்தை சேர்ந்த சமுத்திர குப்தர் கனவு கண்டார். அவர் பற்றி எந்த வரலாற்றிலும் இடம்பெறவே இல்லை. முகலாயர்களுக்கு எதிராக வீரத்தோடு போராடிய மராட்டிய மன்னர் சிவாஜி, ராஜஸ்தான் மேவாட் பகுதியில் மன்னராக இருந்த பப்பா ராவல் நாட்டிற்குள் நுழைய முயற்சி செய்த முகலாயர்களை வீழ்த்தி விரட்டியடித்தார். வரலாற்றில் அவர் குறித்தும் எவ்விதமான தகவல்களும் இடம்பெறவில்லை.” என்று அமித்ஷா பேசியிருப்பது தான் வரலாற்றுத் தளங்களில் அரசியல் பேசுபொருளாகியுள்ளது.

அதேசமயம், இப்படி பட்ட வரலாற்றை கவனிக்கும் போது இந்தியாவின் பல்வேறு மாகாணங்களை மன்னர்கள் ஆண்டது புலப்படும். சுதந்திர இந்தியாவில் அனைவரும் சமம், இந்தியா என்ற நிலப்பரப்பின் தன்மை வேறுபட்டிருக்கிறது. இங்கு, பழைய வரலாற்றைக் கூறி, மீண்டும் இந்தியாவை மாகாணங்களாக பிரித்து பார்க்கும் அபாயம் உள்ளது. அதாவது, தமிழ்நாடு, பீகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், கேரளா, மகாராஷ்டா, வடகிழக்கு மாநிலங்கள் என்று இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்த கலாச்சார பண்பாட்டு கூறுகள் உள்ளன. இதனை, மறைத்து எல்லோரும் இந்து மன்னர்கள் என்று கட்டமைப்பதன் மூலம், அந்தந்த மாநிலங்களின் தனித்த வரலாறும் பண்பாடும் அழிக்கப்பட்டு அந்த இடத்தில், முகலாயர்களுக்கு எதிராக இருந்த இந்து மன்னர்கள் என்ற புதிய வரலாறு கட்டமைக்கப்படும். இது, இந்து உணர்வு நிலையைக் கூர் தீட்டி விடுமே தவிர இங்கு இருக்கும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய உணர்வு நிலையை மழுங்கடித்துவிடும் அபாயமும் உள்ளது.

வரலாற்றை ஏன் மாற்ற வேண்டும்?:

இந்தியாவின் பல்வேறு மாகாணங்களை ஆட்சி செய்த மன்னர்கள் தாங்கள் வாழ்ந்த அல்லது ஆட்சி செய்த தடயங்களை விட்டுச்சென்றுள்ளனர். முகலாயர்களோ, பாண்டியர்களோ, சோழர்களோ, குப்தர்களோ ஆட்சி செய்த வரலாறு இங்கு அரண்மனைகளாகவும், கோயில்களாகவும், ஓவிய, கட்டடைக்கலையாகவும் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது. பார்த்தும் படித்தும் கேட்டும் வளர்ந்த தலைமுறைகள் ஒருபுறமும் இதனால் மாற்றி அமைக்கப்பட்டு அதனை படித்து வளரும் புதிய எதிர்கால தலைமுறையும் சந்திக்கப்போகும் எதிர்வினைகள் நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு நடைமுறை சவாலாக மாறிவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

“சீக்கிய குருக்கள் தொடங்கி பலர் நாட்டிற்காக உயர் தியாகம் செய்திருக்கிறார்கள். அவர்கள் குறித்த வரலாறுகளையும் எழுத வேண்டும். 1857 ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டம் பற்றிய சாவர்க்கர் ஒரு புத்தகம் எழுதி இருக்கிறார். அவர் மட்டும் அதை செய்யாவிட்டால் முந்தையகால வரலாற்றில் இடம்பெற்று இருக்கும் உண்மைகள் மறைக்கப்பட்டு இருக்கும். நாட்டை ஆட்சி செய்த பண்டைய மன்னர்கள் பற்றி வரலாற்று ஆசிரியர்கள் ஏன் கவனம் செலுத்தவில்லை? இனியாவது அவர்களை பற்றி அதிகளவிலான புத்தகங்களை எழுதுங்கள்” என்று அமித்ஷா உத்தரவிடுகிறார்.

வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்பதற்கான கொள்கை முடிவு என்பது இந்து மன்னர்கள் தான் இந்தியாவை ஆட்சி செய்தார்கள் என்பதை நிறுவுவதற்கான முயற்சியாக இருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உபநிடத கருத்துக்களுக்கு எதிராக பேசியதால் சமண – பௌத்த இலக்கிய ஓலைச்சுவடிகள் எரிக்கப்பட்ட வரலாற்றை தேவிபிரசாத் சட்டோ பாத்யாயா, ரெமிலா தாப்பர், டிடிகோசாம்பி உள்ளிட்ட ஆய்வாளர்கள் வரலாற்றை மீட்டு கட்டமைத்துள்ளனர். இந்த வரலாற்றை புதிய வரலாற்றை எழுதுபவர்கள் எப்படி பதிவு செய்வார்கள் என்பது பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகிறது.

மக்களின் வரலாறு முக்கியம் இல்லையா?:

வரலாறு நெடுகிலும் மன்னர்களின் வரலாற்றைத் தான் பாட புத்தகமாக நாம் படித்து வருகிறோம். ஆனால், மக்களுக்கான வரலாறு இங்கு இதுவரை எழுதப்படாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதுவரை ஆண்ட மன்னர்களின் வரலாறு மட்டும் தான் இந்தியாவின் வரலாறா? கீழடியில் இதுவரை அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்டவற்றில் எந்த மத அடையாளமும் இல்லை. அவர்களை ஏதேனும் மத அடையாளத்தினுள் வைத்து பார்க்கும் தன்மை இந்த புதிய வரலாற்றை எழுதுபவர்களிடம் ஏற்பட்டால் அதனை யார் எப்படி திருத்தி எழுதுவார்கள்? மன்னர்களின் வரலாற்றை விதந்து ஓதுவதை விட மக்களுக்கான வரலாற்றை கட்டமைப்பது எதிர்கால இந்தியாவிற்கு இன்றைய தேவையாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வெற்றி; ரபேல் நடால் சாதனையை சமன் செய்த ஜோக்கொவிச்

Web Editor

தமிழ்நாட்டில் பாஜகவின் வளர்ச்சியை சீர்குலைக்க முடியாது- அண்ணாமலை

G SaravanaKumar

பரந்தூர் விமானநிலையம் தமிழக அரசின் முடிவு: மத்திய இணை அமைச்சர் வி கே சிங்

Web Editor