அதானி குழுமத்துக்கு எதிரான விசாரணையை நிறைவு செய்ய 15 நாள்கள் கூடுதல் அவகாசம் கோரி செபி சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை, பங்கு விலை மோசடி உள்ளிட்டவற்றில் ஈடுபட்டதாக அதானி குழும நிறுவனங்கள் மீது அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பா்க் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து பங்குச் சந்தையில் அதானி பங்குகள் விலை கடும் சரிவைச் சந்தித்தன.
தனிநபா் முதலீட்டாளா்கள் தொடங்கி எல்ஐசி வரை அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளனா். இந்த முறைகேடு இதுகுறித்து விசாரணை கோரி வழக்கறிஞர்கள் எம்.எல்.சா்மா, விஷால் திவாரி உள்பட 4 போ் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்த 5 போ் கொண்ட நிபுணா் குழுவை அமைத்து உத்தரவிட்டது.
இந்தக் குழு தனது அறிக்கையை கடந்த மே 17-ஆம் தேதி நீதிமன்றத்தில் சமா்ப்பித்தது. அதில், ‘அதானி நிறுவனம் பங்குகளை உயா்த்திக் காட்டி மோசடியில் ஈடுபட்டதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. மேலும், ஒழுங்காற்று விதிகளை நிறுவனம் மீறவில்லை’ என்று தெரிவித்தது. இதனிடையே, இந்த விவகாரம் குறித்து ஏற்கெனவே விசாரணை நடத்தி வரும் செபியும், அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பின்னா், செபி அறிக்கை தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 14-ஆம் தேதி வரை நீட்டித்து கடந்த மே 17-ஆம் தேதி உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நேற்று (திங்கள்கிழமை) விசாரணக்கு வந்தது.
அப்போது, விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்ய 15 நாள்கள் கூடுதல் அவகாசம் அளிக்குமாறு செபி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘இந்த வழக்கு தொடா்பாக 24 விஷயங்கள் குறித்து செபி ஆய்வு மற்றும் விசாரணை நடத்தி வருகிறது. அவற்றில் 17 விஷயங்கள் மீது விசாரணை முடிந்து, அவற்றுக்கு செபி நடைமுறைகளுக்கான ஆணையம் ஒப்புதலும் அளித்துள்ளது. எஞ்சியுள்ள 7-இல் ஒரு விஷயத்தில் விசாரணை முடிந்து அதுதொடா்பான இடைக்கால அறிக்கை செபி நடைமுறைகளுக்கான ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் 4 விஷயங்களில் இடைக்கால விசாரணை அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. மீதமுள்ள 2 விவகாரங்களில் விசாரணை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த விவகாரங்கள் தொடா்பாக வெளிநாட்டு ஒழுங்காற்று அமைப்புகளிடமிருந்து சில தகவல்கள் வர வேண்டியுள்ளன. எனவே, விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் 15 நாள்கள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்’ என்று கோரியுள்ளது.







