ஊழல் குற்றச்சாட்டில் நெடுஞ்சாலைதுறை பொறியாளர் சஸ்பென்ட்

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் கோலோச்சி அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறையில் ஆயிரத்து 829 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம்…

அதிமுக ஆட்சியில் நெடுஞ்சாலை துறையில் கோலோச்சி அதிகாரி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலைத்துறையில் ஆயிரத்து 829 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்திருந்தது. அதில் தஞ்சாவூர் நெடுஞ்சாலை கோட்டத்தில் உள்ள சாலைகளை பாரமரிப்பது தொடர்பாக பணிகளுக்கான ஒப்பந்தங்கள் 2010 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது.  அதற்கான ஒப்பந்தம் ஆர்.ஆர். இன்பிரா, கேசிபி என்ஜினியர்ஸ், ஜெ.எஸ்.வி இன்பிரா ஆகிய 3 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளது என அறப்போர் இயக்கம் கடந்த 2020 ஆம் ஆண்டே புகார் அளித்திருந்தது. ஒப்பந்தம் நடைபெற்ற விதத்தில் குளறுபடி, குறிப்பிட்ட நிறுவனத்திற்கு சலுகை காட்டியது அறப்போர் இயக்கம் அந்த புகாரில் பட்டியலிட்டிருந்தது.

இந்த விவகாரத்தை திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கையில் எடுத்து தூசி தட்ட ஆரம்பித்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் இந்த டென்டரில் பல்வேறு குளறுபடிகளை கண்டு பிடித்து அரசிடம் அறிக்கையாக அளித்தனர். இதனையடுத்து அப்போது ஒப்பந்தம் விட்ட அதிகாரியும், திருச்சி கண்காணிப்பு பொறியாளராக இருந்த பழனி (தற்போது சென்னை திட்டங்கள் வட்ட கண்காணிப்பு பொறியியாளராக உள்ளார்) பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைத்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். ஆர்.ஆர். இன்பிரா, கேசிபி என்ஜினியர்ஸ், ஜெ.எஸ்.வி இன்பிரா  என இந்த மூன்று நிறுவனங்களும் அதிமுக தலைமைக்கு வேண்டப்பட்ட நிறுவனங்கள் என்பது குறிப்பிடதக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.