அரசின் நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கங்களின் ஊழியரை, அரசு ஊழியராக தான் கருத வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
வேளாண் கடன் தள்ளுபடிக்கு லஞ்சம் பெற்றது தொடர்பான வழக்கில், கூட்டுறவு சங்க செயலர் தாக்கல் செய்த மனு ஆய்வு மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதிகள் சத்தியநராயணன் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது, கூட்டுறவு சங்க ஊழியரை அரசு ஊழியராக கருத முடியாது என மதுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு விளக்கமளித்த நீதிபதிகள், தனியார் நிறுவன ஊழியர்களின் நலனுக்காக அமைக்கப்பட்டுள்ள கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்களை அரசு ஊழியர்களாக கருத முடியாது என்று தான் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியது.
அரசு நிதியுதவி பெறும் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு ஊழியர்களாகவே கருதப்படுவர் எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர். இதையடுத்து, மறு ஆய்வு மனுவை சம்பந்தப்பட்ட நீதிபதி முன் பட்டியலிட பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







