நிதி மோசடி வழக்கில், நியோமேக்ஸ் நிறுவனத்தின் மேலும் ஒரு இயக்குநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிதி மோசடி வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் பாளையங்கோட்டை கிளையின் மற்றுமொரு இயக்குநர் சகாயராஜா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த பிரபல நியோமேக்ஸ் என்ற நிதி நிறுவனம் பன்மடங்கு வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், பாளையங்கோட்டையில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் கிளை நிறுவனமான கார்லாண்டோ புராபர்டீஸ் நிறுவனத்தின் இயக்குநர் சகாயராஜாவை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பல்வேறு பெயர்களில் இயங்கி வந்த இந்த நிறுவனத்தின் நெல்லை, கோவில்பட்டி, பாளையங்கோட்டை கிளை இயக்குனர்கள் மூவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சகாய ராஜாவை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிபதி முன்பு போலீஸார் ஆஜர்படுத்திய பின்னர், ஆகஸ்ட் 4 வரை அவருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நியோமேக்ஸ் தலைமை இயக்குனர்களான மதுரையை சேர்ந்த வீரசக்தி, பாலசுப்பிரமணியம் மற்றும் திருச்சியை சேர்ந்த கமலக்கண்ணன் ஆகிய மூவரும் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.







