மணிப்பூர் பழங்குடியின பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதியை கண்டித்து யானை மலை மீது போராட்டம் நடத்திய 120 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பிபைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் தாக்கினர். பின்னர், அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட
மக்கள் யானை மலை மீது ஏறி மத்திய, மாநில அரசுக்கு கோரிக்கை வைக்கும் விதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும், உச்ச நீதிமன்றம்
நீதிபதி தலைமையில் உண்மை அறியும் குழு நியமிக்க வேண்டும், மணிப்பூர் அரசு
ஆளுநர் ஆகியோரை கண்டித்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற
வேண்டும், குற்றம் செய்தவர்களுக்கு மணிப்பூர் மண்ணிலேயே தூக்கிலிட வேண்டும்
என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஒத்தக்கடை டிஎஸ்பி மற்றும் வட்டாட்சியர்
தலைமையில் ஒரு மணி நேரத்திற்கு பிறகு பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் கீழே அழைத்து வந்தனர்
இந்த நிலையில் அரும்பனூர் கிராம நிர்வாக அலுவலர் முருகேசன் அளித்த புகாரின்
அடிப்படையில் ஒத்தக்கடை பொதுமக்கள் மற்றும் எவர்சில்வர் பட்டறை தொழிலாளர்கள், மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட 120 பேர் மீதும் இரண்டு பிரிவின் கீழ் மதுரை ஒத்தக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.







